மெஞ்ஞானபுரம் அருகே 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசம் 3 ஆயிரம் கிலோ கருப்புக்கட்டி உருகின
மெஞ்ஞானபுரம் அருகே 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது. 3 ஆயிரம் கிலோ கருப்புக்கட்டி உருகி சேதம் அடைந்தது.
மெஞ்ஞானபுரம்,
மெஞ்ஞானபுரம் அருகே 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசமானது. 3 ஆயிரம் கிலோ கருப்புக்கட்டி உருகி சேதம் அடைந்தது.
குடிசைகளில் தீ விபத்துதூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே குமாரசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 37). பனையேறும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்திரை கனி. இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று காலையில் சித்திரை கனி காபி தயாரிப்பதற்காக விறகு அடுப்பில் தீப்பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசையில் தீப்பிடித்தது.
அப்போது காற்று வேகமாக வீசியதால் மளமளவென்று குடிசை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. மேலும் பக்கத்து வீடான முருகேசனின் (35) குடிசையிலும் தீப்பிடித்தது. உடனே குடிசைகளில் இருந்த அனைவரும் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
ரூ.7½ லட்சம் கருப்புக்கட்டி சேதம்உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, குடிசைகளில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க போராடினர். இதுகுறித்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அதன் அருகில் உள்ள மற்ற குடிசைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்தில் 2 குடிசைகளும் எரிந்து நாசமானது. குடிசைகளில் இருந்த டி.வி., கட்டில், பீரோ, துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. தெய்வேந்திரனின் குடிசையில் இருந்த சுமார் 3 ஆயிரம் கிலோ கருப்புக்கட்டி தீயில் உருகி சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.7½ லட்சம் ஆகும். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.