நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை: ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 2 பேர் சரண்
நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்,
நெல்லையில் ஆட்டோ டிரைவர் கொலை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி என்ற டோனி பாண்டி (வயது 32) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவில் சி.என்.கிராமம் ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் திடீரென்று இசக்கிபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்–ஒழுங்கு) சுகுணாசிங், உதவி கமிஷனர் கிருஷ்ணசாமி, சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பணத்தகராறு
போலீசாரின் விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. அதாவது, மதுரையை சேர்ந்த தங்கமணி என்பவர் சமீபத்தில் சி.என்.கிராமத்துக்கு வந்து குடியேறினார். அவர்களுடன் இசக்கி பாண்டி குடும்பத்தினர் நெருங்கி பழகினர். அப்போது தங்கமணி, இசக்கிபாண்டி சகோதரர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தை இசக்கிபாண்டியும், அவருடைய சகோதரர்களும் வட்டிக்கு கொடுத்து அதில் வரும் பணத்தை குறிப்பிட்ட பகுதியை தங்கமணிக்கு கொடுத்து வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக வட்டி பணம் சரியாக வசூலாகாததால், இசக்கிபாண்டி தரப்பினர் தங்கமணிக்கு வட்டிப்பணம் கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக தங்கமணி ஆதரவாளர்களான அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், பேச்சிமுத்து ஆகியோர் இசக்கிபாண்டி தரப்பினரிடம் வட்டிப்பணத்தை கேட்டு வந்தனர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் நேற்று முன்தினம் சுப்பிரமணியன், பேச்சிமுத்து, மானூர் ரஸ்தாவை சேர்ந்த மூக்காண்டி உள்பட 4 பேர் சேர்ந்து இசக்கிபாண்டியை வெட்டிக் கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்தார். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
2 பேர் சரண்
இந்த நிலையில் இசக்கிபாண்டி கொலை தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். நெல்லை சி.என்.கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன் (25), மானூர் ரஸ்தா நடுத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முகேஷ் (25) ஆகிய 2 பேரும் நேற்று ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்கள் 2 பேரையும் காவலில் வைத்து, வருகிற 30–ந் தேதி நெல்லை 4–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு, நீதிபதி சரவணகுமார் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரண் அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால்தான் கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் கொலையில் எத்தனை பேர் சம்பந்தப்பட்டார்கள் போன்ற விவரங்கள் தெரியவரும். எனவே நெல்லை சந்திப்பு போலீசார், சரண் அடைந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தேவையான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் குவிப்பு
இதற்கிடையே இசக்கிபாண்டி உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு இசக்கிபாண்டி மனைவி ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினர் ஏராளமானோர் திரண்டு நின்றனர். அவர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர்.
இதையொட்டி மருத்துவ கல்லூரி வளாகம் மற்றும் சி.என்.கிராமத்தில் மோதல் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story