மாவட்டம் முழுவதும்: மகளிர் திட்டம் மூலம் ரூ.9½ கோடி கடன் - கலெக்டர் தகவல்


மாவட்டம் முழுவதும்: மகளிர் திட்டம் மூலம் ரூ.9½ கோடி கடன் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Nov 2018 9:30 PM GMT (Updated: 27 Nov 2018 4:47 PM GMT)

தேனி மாவட்டம் முழுவதும் மகளிர் திட்டம் சார்பில் மொத்தம் ரூ.9½ கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி, 


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் (மகளிர் திட்டம்) சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் தனிநபர் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் இதுவரை 200 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7 கோடியே 6 லட்சம் மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

இதில், போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 61 மகளிர் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம், ஆண்டிப்பட்டி தொகுதியில் ஒரு சுயஉதவிக்குழுவுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், பெரியகுளம் தொகுதியில் 68 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பிலும், கம்பம் தொகுதியில் 70 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பிலும் நேரடிக்கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல், மாவட்டத்தில் மொத்தம் 422 பேருக்கு ரூ.2 கோடியே 52 லட்சம் மதிப்பில் தனிநபர் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதில் போடி தொகுதியில் 105 பேருக்கு ரூ.63 லட்சம், ஆண்டிப்பட்டி தொகுதியில் 4 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம், பெரியகுளம் தொகுதியில் 142 பேருக்கு ரூ.85 லட்சத்து 20 ஆயிரம், கம்பம் தொகுதியில் 171 பேருக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும் தனிநபர் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் 200 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 422 தனிநபர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் முதல் தற்போது வரை ரூ.9 கோடியே 58 லட்சம் மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

அதுமட்டும் இன்றி 2016-17-ம் நிதியாண்டு முதல் மாவட்டத்தில் 6 நகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகளில் 689 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு 569 குழுக்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் 539 குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல் நிதியாக ரூ.53 லட்சத்து 90 ஆயிரமும், பகுதி அளவிலான 5 கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அவற்றில் 4 கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்பட்டு உள்ளது.

இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 2016-17-ம் நிதியாண்டு முதல் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 598 இளைஞர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி, தையல் பயிற்சி, வெல்டிங் பயிற்சி மற்றும் கணினி பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. இதில் 286 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story