வேப்பனப்பள்ளி அருகே: பழமையான மரக்கிளை முறிந்து விழுந்தது - மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு
வேப்பனப்பள்ளி அருகே பழமையான மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் 70 ஆண்டுகள் பழமை யான அரசமரம் சாலையோரம் உள்ளது. இந்த மரம் பல கிளைகளுடன் பரந்து விரிந்து காணப்பட்டது. இந்த மரத்தில் இருந்து பெரிய கிளை ஒன்று நேற்று காலை முறிந்து கீழே விழுந்தது.
இந்த கிளைகள் அருகில் இருந்த மின் கம்பிகள் மீது விழுந்ததால் அந்த பகுதியில் உள்ள 3 மின்கம்பங்கள் உடைந்து சாலைகளில் விழுவிழுந்தன. இதனால் அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால் மின் இணைப்பு துண்டானது. மரக்கிளை மற்றும் மின் கம்பங்கள் விழுந்தபோது பொதுமக்கள் சாலையில் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பட்டது. இதுகுறித்து மின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மரக்கிளை, மின்கம்பங்களை அகற்றினர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. மேலும் உடைந்த மின் கம்பங்களுக்கு பதில் வேறு கம்பங்கள் கொண்டு வரப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். மரக்கிளை முடிந்து விழுந்து மின்கம்பங்கள் உடைந்து விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story