நிலக்கோட்டை அருகே பரபரப்பு: காவலாளியை கழிவறைக்குள் பூட்டி வைத்து தனியார் பள்ளியில் திருட்டு


நிலக்கோட்டை அருகே பரபரப்பு: காவலாளியை கழிவறைக்குள் பூட்டி வைத்து தனியார் பள்ளியில் திருட்டு
x
தினத்தந்தி 28 Nov 2018 3:30 AM IST (Updated: 28 Nov 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே, காவலாளியை கழிவறைக்குள் பூட்டி தனியார் பள்ளியில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், அதேபகுதியை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் அவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றார்.

அப்போது பள்ளி வளாகத்தில் பதுக்கி இருந்த 3 பேர் வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் முருகனை தாக்கி செல்போனை பறித்து கொண்டு, கழிவறைக்குள் அவரை தள்ளி வெளிப்புறமாக பூட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் அலறினார். ஆனால் பள்ளியின் அருகே வீடுகள் இல்லாததால் அவரது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

இந்தநிலையில் பள்ளியில் உள்ள ஒரு அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் ஆகியவற்றை திருடினர். மேலும் பள்ளியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவையும் கழற்றி சென்று விட்டனர். இதற்கிடையே அந்த பள்ளி மைதானத்தில் விளையாடுவதற்காக தினமும் இளைஞர்கள் சிலர் வருவார்கள்.

அதன்படி நேற்று காலை அவர்கள் பள்ளி மைதானத்துக்கு விளையாட வந்தனர். அப்போது காவலாளி முருகன் சத்தம் போட்டு கொண்டிருப்பதை கண்டனர். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து முருகனை மீட்டனர். அதன்பிறகே முருகனை கழிவறையில் அடைத்து விட்டு, பள்ளியில் பொருட்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் சங்கேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பொருட் கள் திருட்டு போன அறையில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்த நாய், சிறிது தூரம் சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story