மாவட்டத்தில் இன்று முதல் : ஆன்-லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் பணி புறக்கணிப்பு - கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவிப்பு


மாவட்டத்தில் இன்று முதல் : ஆன்-லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் பணி புறக்கணிப்பு - கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 3:15 AM IST (Updated: 28 Nov 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல் ஆன்-லைன் மூலம் சான்றிதழ் வழங்கும் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

விழுப்புரம், 

இணையதள அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், மாவட்ட மாறுதல் உத்தரவுகளை வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும், உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை ஏற்க வேண்டும், கழிப்பறை வசதியுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம் வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் இவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக இன்று (புதன்கிழமை) முதல் பிறப்பு, இறப்பு பதிவு, பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்களை ஆன்-லைன் மூலம் வழங்கும் அனைத்து விதமான பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களிலும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்த 375 பேர் இன்று முதல் ஆன்-லைன் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதையொட்டி நேற்று அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவது சம்பந்தமாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்தனர். விழுப்புரம் தாலுகா அலுவலகத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் தலைமையில் வட்ட தலைவர் லட்சுமணன், செயலாளர் ஜெயராமன், அமைப்பு செயலாளர் உத்திரவேல், இணை செயலாளர் உமாபதி உள்ளிட்டோர் சென்று போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதி தாசில்தார் சையத்மெகமூத்திடம் கொடுத்தனர்.

Next Story