கஜா புயல் சேத மதிப்பு குறித்து ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்; மத்தியக் குழு தலைவர் பேட்டி
கஜா புயல் சேத மதிப்பு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் ஒரு வாரத்தில் தாக்கல் செய்வோம் என்று புதுவையில் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் தெரிவித்தார்.
புதுச்சேரி,
கஜா புயல் கரையை கடந்தபோது திருவாரூர், தஞ்சை, நாகபட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகளும் பலத்த சேதமடைந்தன. காரைக்கால் மாவட்டத்திலும் கஜா புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இங்கும் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மீனவர்களின் படகுகளும் பாதிக்கப்பட்டன. புயலையொட்டி புதுவை அரசு மேற்கொண்டு இருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. காரைக்காலுக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்– அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பில் ரூ.187 கோடிக்கு சேதம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக புதுவை அரசு சார்பில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. முதல்–அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து இடைக்கால நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை தொடர்புகொண்டு மத்தியக்குழுவை காரைக்காலுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்துக்கு வந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று சேதங்கள் ஏற்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த குழுவினரிடம் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கி கண்ணீர் விட்டு கதறினர். பெண்கள் பலர் காலில் விழுந்து முறையிட்டனர்.
இதன்பின் நேற்று முன்தினம் மத்திய குழுவினர் காரைக்கால் மாவட்டத்துக்கு வந்து புயலால் சேதம் அடைந்த பட்டிச்சேரி, நடுகளம்பேட், வடகட்டளை ஆகிய மீனவ கிராமங்களுக்கு சென்றனர். அங்கு சேதமான மீன்பிடி படகுகள், வலைகள், குடிசைகள் மற்றும் ஆற்றுப்படுகையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு திரண்டிருந்த மக்களிடம் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் காக்கமொழி, அத்திபடுகை கிராமங்களில் புயலால் சாய்ந்த தென்னை மரங்கள், மழைநீர் புகுந்த வயல்கள், சேதமடைந்த பயிர்கள் மற்றும் குடிசைகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு சேதங்களை மதிப்பீடு செய்தனர்.
இதன்பின் அவர்கள் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வந்து தங்கினர். நேற்று காலை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்தியக்குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட் மற்றும் குழுவினை சேர்ந்த நிதித்துறை ஆலோசகர் கவுல், வேளாண்துறை இயக்குனர் (பொறுப்பு) ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி மாணிக்சந்த் பண்டிட், மின்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை இயக்குனர் ஹர்ஷா, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது மத்தியக் குழுவினரிடம் புதுவை அரசு தயாரித்து வைத்து இருந்த புயல் சேத விவர அறிக்கை தரப்பட்டது. அதில் சேதங்கள் குறித்து துறைவாரியாக விளக்கப்பட்டுள்ளது.
கூட்டம் முடிந்ததும் மத்தியக்குழுவின் தலைவரும் உள்துறை இணை செயலாளருமான டேனியல் ரிச்சர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கஜா புயலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதற்காக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் புயல் காரணமாக அதிக அளவில் உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வலைகள், படகுகள் சேதமடைந்து மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வயல்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமடைந்துள்ளன. தென்னை, வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. குடிசை வீடுகள் சரிந்து விழுந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் சேதங்கள் தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்து முடித்துள்ளோம். புதுவை அரசு அளித்துள்ள புள்ளி விவரங்களையும் ஆய்வு செய்து புயலால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து மத்திய அரசிடம் ஒரு வாரத்தில் அறிக்கை அளிப்போம்.
இவ்வாறு டேனியல் ரிச்சர்ட் கூறினார்.
இதன்பின் மத்தியக்குழுவினர் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.