இலவச அரிசிக்கு பதில் மேலும் 2 மாதத்திற்கான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த திட்டம்; அமைச்சர் கந்தசாமி தகவல்


இலவச அரிசிக்கு பதில் மேலும் 2 மாதத்திற்கான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த திட்டம்; அமைச்சர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:45 AM IST (Updated: 28 Nov 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

இலவச அரிசிக்கு பதில் மேலும் 2 மாதத்திற்கான தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் சமூக நலத்துறையும், மத்திய அரசின் சமூக நீதி அதிகாரமளித்தல் தேசிய வாழ்வாதார சேவை மையமும் இணைந்து மாற்று திறனாளிகளுக்கான முடநீக்கு உபகரணங்கள் வழங்கும் விழாவினை சமூக நலத்துறை அலுவலகத்தில் நடத்தின. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். சமூக நலத்துறை செயலாளர் அலிஸ்வாஸ் வரவேற்று பேசினார்.

விழாவில் 585 மாற்று திறனாளிகளுக்கு ரூ.35.66 லட்சம் மதிப்புள்ள முடநீக்கு கருவிகள் வழங்கப்பட்டது. இந்த கருவிகளை அமைச்சர் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:–

புதுவை அரசுக்கு பல நெருக்கடிகள் இருந்தாலும் மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். இதில் காலதாமதம் ஏற்படலாம். திட்டத்தை முடக்கி வைக்கலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

மக்கள் சிரமங்களை சற்று பொறுத்துக்கொள்ள வேண்டும். மாற்ற திறனாளிகளுக்கு எல்லா துறையிலும் உரிய ஒதுக்கீடு வழங்க அந்தந்த துறை இயக்குனர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:–

புதுவையில் சுமார் 30 ஆயிரம் மாற்று திறனாளிகள் உள்ளனர். அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும், தொழில் தொடங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிறைய திட்டங்களை செயல்படத்த எண்ணம் உள்ளது. ஆனால் போதிய நிதியில்லை. இதனால் திட்டங்களை நிறைவேற்றவும் காலதாமதம் ஆகிறது.

அரசின் வருவாயும் குறைவாக உள்ளது. இதனால் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற முடியவில்லை. மத்திய அரசு வழங்கம் மானியமும் 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2 மாதத்துக்கான இலவச அரிசிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 மாதத்துக்கான இலவச அரிசிக்கான பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். நிதி தட்டுப்பாடு இருந்தாலும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.


Next Story