மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் : முதல்-மந்திரி பதிலை கண்டித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி


மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் : முதல்-மந்திரி பதிலை கண்டித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
x
தினத்தந்தி 28 Nov 2018 3:44 AM IST (Updated: 28 Nov 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பதிலை கண்டித்து சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 2 முறை சபை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.

மும்பை,

மராத்தா இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் கொடுத்த அறிக்கையையும், தங்கர் சமுதாயத்தினர் குறித்து டாடா நிறுவனம் கொடுத்த அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்யவேண்டும் என நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், அறிக்கை தாக்கல் செய்வது குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

சட்ட விதிமுறைகளின் படி மாநில பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் கொடுத்த பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை மட்டுமே சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.

ஏற்கனவே இருக்கும் 52 சதவீத நிலுவையில் உள்ள இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் கமிஷனின் அறிக்கையை கேட்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் தங்கர் இடஒதுக்கீடு குறித்து அவர் கூறுகையில், “தங்கர் சமுதாயம் குறித்து டாடா நிறுவனம் வழங்கிய அறிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நாங்கள் சட்டசபையில் தாக்கல் செய்வோம்.

டாடா நிறுவனம் கொடுத்த பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்து, தற்போது உள்ள எஸ்.டி.பிரிவு இடஒதுக்கீடு பெறும் மக்கள் பாதிக்காத வகையில் தங்கர் சமுதாயத்தையும் அந்த பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முஸ்லிம்கள் இடஒதுக்கீடு குறித்து பேசிய அவர், “முந்தைய சிவசேனா, பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் இடம் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கும் எங்கள் அரசு கல்வியில் சலுகைகள் வழங்கி வருகிறது.

காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் முஸ்லிம்களை வெறும் ஓட்டுவங்கியாக தான் பயன்படுத்துக்கின்றன” என்றார்.

முதல்-மந்திரியின்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சபையை தவறாக வழிநடத்துவதாகவும், கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்யவும் வலியறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து 2 முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story