அந்தியூர் வாரச்சந்தை பொதுமக்கள் நலன் கருதியே இடமாற்றம்; எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் அறிக்கை
அந்தியூர் வாரச்சந்தை பொதுமக்கள் நலன் கருதியே இடமாற்றம் செய்யப்படுவதாக ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
அந்தியூர்,
அந்தியூரில் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சந்தை நடைபெறும் இடத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
அந்தியூர் வாரச்சந்தை 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. அந்தியூர் தனி தாலுகாவாக பிரிக்கப்பட்ட பிறகு சந்தையின் ஒரு பகுதியில் தாசில்தார் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலம் என அரசாங்க கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் சந்தைக்கு போதுமான இட வசதி இல்லை.
மேலும் கால்நடை சந்தைக்கு இடம் போக எஞ்சிய 3.5 ஏக்கர் இடத்திலேயே மற்ற சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பர்கூர் சாலை, சத்தி சாலைகளில் சந்தை நாட்களில் மிகவும் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
பஸ் நிலையமும் குறுகிய இடத்தில்தான் செயல்படுகிறது. மக்கள் நலன் கருதியும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும்தான் பாரம்பரியமிக்க அந்தியூர் சந்தையை இடம் மாற்றுவது என ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி பஸ் நிலையத்தை வாரச்சந்தைக்கும், வாரச்சந்தையை அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்திலும் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதில் 10 ஏக்கர் வாரச்சந்தைக்கும், 3 ஏக்கர் மாட்டுச்சந்தைக்கும் பிரித்து விடப்படும்.
இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கு இட வசதிகள் செய்யப்படும். சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு செய்து தரப்படும்.
இதேபோல் சந்தைக்கு சென்றுவர பஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும். தற்போதுள்ள பஸ் நிலையம் தினசரி மார்க்கெட் ஆக மாற்றப்படும். இந்த ஒவ்வொரு மாற்றமும் அந்தியூர் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக மட்டுமே செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.