குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா
திருப்பூர் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் காலேஜ் ரோடு எம்.ஜி.ஆர். நகர்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அங்கு உள்ள ஒரு காலி இடத்தை சுத்தம் செய்யும் பணியிலும் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், திடக்கழிவு மேலாண்மை என்ற பெயரில் மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே சுகாதார சீர்கேட்டால் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் எங்கள் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று கூறு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.