பஸ் இயக்காததை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் - விருத்தாசலத்தில் பரபரப்பு
உளுந்தூர்பேட்டைக்கு பஸ் இயக்காததை கண்டித்து விருத்தாசலம் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கடலூர் மட்டுமின்றி விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பஸ்களில் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தனர். பின்னர் கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வந்து நீண்ட நேரமாகியும், அவர்கள் செல்லும் பகுதிக்கான பஸ் வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விருத்தாசலம் பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினர்.
பின்னர் போக்குவரத்துத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து உடனடியாக போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அதில் கல்லூரி மாணவ, மாணவிகள் உளுந்தூர்பேட்டை பகுதிக்கு சென்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story