பெங்களூருவில் நாளை நடக்கிறது : ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


பெங்களூருவில் நாளை நடக்கிறது : ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O படத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:16 AM IST (Updated: 28 Nov 2018 4:16 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O படத்துக்கு எதிராக பெங்களூருவில் நாளை(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் பிற மொழி படங்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. இதனால் கன்னட படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்களில் கன்னட படங்கள் திரையிடுவது இல்லை.

கர்நாடக திரைப்பட வர்த்தகசபை, கன்னட படங்களுக்கு திரையரங்குகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மொழி படங்களுக்கு எதிராக கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே போராடி சிறைக்கு சென்றேன்.

அப்போது என்னை கைது செய்த அந்த அதிகாரியை, முதல்-மந்திரியாக இருந்த நிஜலிங்கப்பா டெல்லிக்கு அனுப்பினார். என்னை சிறையில் இருந்து விடுதலை செய்தனர். பிற மொழி புதிய படங்களை கர்நாடகத்தில் திரையிடக்கூடாது. ஒரு மாதத்திற்கு பிறகே திரையிட வேண்டும்.

வெளி மாநிலங்களில் கன்னட படங்களை திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மொழி படங்களுக்கு 1 அல்லது 2 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் திரையரங்குகளை ஒதுக்குவது சரியல்ல. ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O படம் 29-ந்தேதி (நாளை) வெளியாகிறது. இந்த படத்துக்கு எதிராக 29-ந்தேதி பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளேன்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.


Next Story