12-வது தலைமுறை டொயோடா கொரோலா
டொயோடா நிறுவனம் தனது கொரோலா மாடல் காரில் புதியதாக 12-வது தலைமுறை மாடலை அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ளது.
இது டொயோடா நிறுவனத்தின் புதிய சர்வதேச வடிவமைப்பு (டி.என்.ஜி.ஏ.) மையத்தால் உருவாக்கப்பட்டது. இதனால் டொயோடா நிறுவனத்தின் அனைத்து ஆலைகளிலும் இதைத் தயாரிக்க முடியும். இந்த மையம் ஏற்கனவே வடிவமைத்ததுதான் பிரியூஸ் மற்றும் காம்ரி மாடல் கார்களாகும்.
இதன் முன்புற பம்பர் மற்றும் முகப்பு விளக்கு வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல பின்புற விளக்கு பகுதிகளும் வித்தியாசமாக ‘ஜே’ வடிவில் உள்ளது. இது பார்ப்பதற்கு மெலிதான தோற்றத்தை அளிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஜப்பானிய சந்தையில் இது ‘லெவின்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. சில ஆசிய சந்தையிலும் இதே பெயர்தான் நீடிக்கும்.
காரின் உட்புறத்தில் மிகப் பெரிய அளவிலான தொடு திரை உள்ளது. இதில் விபத்து பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. விபத்து தடுப்புக்கு ரேடார் குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. அதேபோல லேன் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டீரிங், சாலை விதிகளை உணர்ந்து செயல்படுவது உள்ளிட்டவற்றோடு அதை மீறும்போது டிரைவருக்கு எச்சரிக்கை செய்யும் அம்சமும் இதில் உள்ளது.
இதில் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 171 ஹெச்.பி., 205 நியூட்டன் மீட்டர் டார்க் திறனைக் கொண்டது. அமெரிக்க சந்தைக்கென 1.8 லிட்டர் என்ஜின் பொருத்திய கார்களை தயாரித்து, அதை சந்தைப்படுத்த உள்ளனர். கியர் பாக்ஸ் வழக்கம்போல சி.வி.டி. மற்றும் 6 கியர்களுடன் வந்துள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் அதே மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த மாடல் ஹூண்டாய் எலென்ட்ரா, ஸ்கோடா ஆக்டேவியா, அடுத்த தலைமுறை ஹோண்டா சிவிக் ஆகிய மாடலுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Related Tags :
Next Story