விருப்பத்துக்கு மாறாக நடக்க இருந்த திருமணத்தை தடுத்து ஏழை மாணவி இலவசமாக நர்சிங் கல்லூரியில் படிக்க ஏற்பாடு கலெக்டர் நடவடிக்கை


விருப்பத்துக்கு மாறாக நடக்க இருந்த திருமணத்தை தடுத்து ஏழை மாணவி இலவசமாக நர்சிங் கல்லூரியில் படிக்க ஏற்பாடு கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2018 4:45 AM IST (Updated: 28 Nov 2018 8:28 PM IST)
t-max-icont-min-icon

விருப்பத்துக்கு மாறாக 17 வயது பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய கலெக்டர் அந்த மாணவியை தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்த்து கட்டணமின்றி படிக்கவும் ஏற்பாடு செய்தார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பார்வதி அகரம் கிராமத்தைச் சேர்ந்த வித்யா (வயது 17) என்ற பெண் கடந்த அக்டோபர் மாதம் 8–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அவர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் மனு ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘எனக்கு 18 வயது நிரம்பவில்லை. ஆனால் எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அதில் விருப்பம் இல்லை. எனவே திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுமீது கலெக்டர் விசாரணை நடத்தினார். வித்யா 5 வயதான போதே அவரது தந்தை இறந்து விட்டார், அவரது தாயார் விவசாய கூலி வேலை செய்து அதன் மூலம் கிடைக்கும் மிகவும் சொற்ப வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து வருகிறார். மாணவி வித்யா மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தொடர்ந்து படிக்க வைக்காமல் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து மாணவி வித்யாவை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்தார். பின்னர் அவரது தாயாரையும் கலெக்டர் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவி வித்யா படித்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும் என்பதையும் எடுத்துரைத்து திருமணத்தை நிறுத்தினார். அதன் பின்னர் மாணவியின் பாதுகாப்பு கருதி சமூக நலத்துறையின் மூலமாக குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்தார். வித்யா உயர்கல்வி படிக்க ஆசை உள்ளதாக கலெக்டரிடம் தெரிவித்தார்.

தனியார் நிறுவன நிதியுதவியுடன் மாணவி வித்யாவை வந்தவாசியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிக்க ஏற்பாடு செய்தார். வித்யா 4 ஆண்டிற்கும் செலுத்த வேண்டிய வருடாந்திர கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களுக்கான மொத்த தொகை ரூ.3 லட்சம் தனியார் நிறுவனத்திலிருந்து செலுத்தப்பட்டது. அதற்கான காசோலையை கலெக்டர் அலுவலகத்தில் வந்தவாசியை சேர்ந்த கல்லூரி நிர்வாகிகளிடம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாணவி முன்னிலையில் வழங்கினார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உடன் இருந்தார்.


Next Story