தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது எதிர்ப்பாளர்கள் கருத்து
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்று எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சூடு மற்றும் தொடர் போராட்டங்களில் 13 பேர் பலியானார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 28–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலை மூடி ‘சீல்‘ வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை அமைத்தது.
இந்த குழுவினர் கடந்த செப்டம்பர் மாதம் 22, 23–ந் தேதிகளில் தூத்துக்குடிக்கு வந்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றனர். பின்னர் சென்னையிலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மனுக்கள் பெற்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று அந்த குழுவினர் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம். ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவின் அறிக்கை தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏமாற்றம் அளிக்கிறது
இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:–
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு தெரிவித்த காரணம் கேலிக் கூத்தானது. ஆலை பல்வேறு விதிமீறல்களை செய்து உள்ளது. அதனை சுட்டிக் காட்டாமல் அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசு தெரிந்து வலிமை இல்லாத ஆணையை பிறப்பித்து உள்ளது. தமிழக அரசு முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு அறிவியல் பூர்வமாகவோ, கள ஆய்வையோ முழுமையாக மேற்கொள்ளவில்லை. இதனால் ஆலைக்கு சார்பாக அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். இந்த அறிக்கை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போன்று உள்ளது. இந்த அறிக்கை தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதனை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமும், அரசும் செய்த கூட்டு சதியாகவே பார்க்கிறோம். ஆலையை நிரந்தரமாக அகற்றும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வக்கீல் அதிசயகுமார்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த வக்கீல் அதிசயகுமார் கூறுகையில் “தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தருண் அகர்வால் குழு பரிந்துரையை சமர்ப்பித்து உள்ளது. இது தூத்துக்குடி மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய பரிந்துரை. மக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
தூத்துக்குடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆலையை மூட வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தில் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு எதிரான ஒரு பரிந்துரையை குழு சமர்ப்பித்து உள்ளது. ஆகையால் தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும். நிரந்தரமாக ஆலையை மூடுவதற்கான வழிமுறையை திட்டமிட்டு அவசர சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்“ என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறுகையில் “தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாசு காரணமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. அதன்பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலை மாசு குறித்து ஆய்வு செய்ய தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவின் வேலை தீர்ப்பு கூறுவது இல்லை. பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் மக்களை சந்தித்து ஒரு அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே அதன் வேலை.
ஆனால் அந்த குழு, தமிழக அரசு ஆலையை மூடுவதற்கு பிறப்பித்த ஆணை முறையானது அல்ல என்றும், அதனை விலக்கி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் ஊதுகுழல் போன்றே தருண் அகர்வால் குழு நடந்து கொண்டதாக தெரிகிறது. அந்த குழு அதிகார வரம்பை மீறி உள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு கூட அறிக்கை தரப்படவில்லை. தமிழக அரசு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், வேதாந்தா நிறுவனத்துக்கு மட்டுமே அறிக்கை நகல் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த குழுவின் அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. அந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story