13 நாட்களுக்கு பிறகு பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு 13 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரிஜம் ஏரி. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த ஏரிக்கு செல்லும் வழியில் மதிக்கெட்டான் சோலை, அமைதிபள்ளத்தாக்கு, தொப்பிதூக்கி பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதுதவிர அரியவகை மூலிகை செடிகளும் உள்ளன.
வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், இந்த பகுதிகளுக்கு வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த பேரிஜம் ஏரியை பார்வையிட அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் ‘கஜா’ புயலின் காரணமாக பேரிஜம் ஏரிக்கு செல்லும் மலைப்பாதையில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 15-ந்தேதி முதல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
அதன்பிறகு மரங்கள் அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து 13 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story