தேனியில் பரபரப்பு: ஆசிரமத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாயுடன் போலீசார் சோதனை
தேனியில் ஆசிரமத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தேனி,
தேனியை அடுத்துள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரில் வேதபுரி என்ற ஸ்ரீசுவாமி சித்பவாநந்த ஆசிரமம் அமைந்துள்ளது. அந்த ஆசிரமத்தையொட்டி தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
அதுபோல், இந்து அமைப்புகளின் தலைவர்கள் தேனிக்கு வந்தால் இந்த ஆசிரமத்தில் தங்குவது வழக்கம். ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் இந்த ஆசிரமத்தில் அளிக்கப் படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆசிரமத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அனுப்பியவரின் பெயர் விவரம் குறிப்பிடப்படவில்லை. அந்த கடிதத்தில் ஆசிரமத்தில் வெடிகுண்டு வெடிக் கும் என்று மிரட்டல் விடுத்த வாசகங்கள் இடம் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரமத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் தலைமையில், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ், பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரமத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வந்தனர். ஆசிரமம் மற்றும் கோவில் பகுதியில் வெடிகுண்டுகள் உள்ளதா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை.
இதையடுத்து ஆசிரமத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் மிரட்டல் கடிதத்தை அனுப்பியது யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story