லஞ்ச வழக்கில் கைதான மாநகராட்சி பெண் அதிகாரி, உதவியாளர் பணி இடைநீக்கம்


லஞ்ச வழக்கில் கைதான மாநகராட்சி பெண் அதிகாரி, உதவியாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:15 AM IST (Updated: 28 Nov 2018 11:36 PM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் கைதான மாநகராட்சி பெண் அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் அரசு, வெள்ளி வியாபாரி. இவர் தனது தாயாருக்கு சொந்தமான நிலத்துக்கு வீட்டுமனை அங்கீகாரம் பெற ஆன்லைன் மூலம் சேலம் மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவுக்கு விண்ணப்பித்தார். இதற்கான பணம் கட்டிய பிறகும் அவருடைய மனையை அதிகாரிகள் வரன்முறைபடுத்தவில்லை.

இதுகுறித்து நகரமைப்பு செயற்பொறியாளரான கலைவாணியை சந்தித்து அரசு கேட்டார். அப்போது அவரிடம் நிலத்தை வரன்முறைப்படுத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் கலைவாணியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அவர் இந்த பணத்தை தனது உதவியாளர் உஸ்மானிடம் கொடுக்குமாறு கூறினார். அதன்பேரில் அரசு உஸ்மானிடம் பணத்தை கொடுத்தார். இதை அவர் வாங்கினார். இதையடுத்து உஸ்மான் மற்றும் கலைவாணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில் வீட்டுமனையை வரன்முறை செய்வதற்காக அதிகாரிகள், பலரிடம் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து கலைவாணி, உஸ்மான் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story