முதல்போக நெல் சாகுபடிக்காக மருதாநதி அணையில் தண்ணீர் திறப்பு


முதல்போக நெல் சாகுபடிக்காக மருதாநதி அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 10:00 PM GMT (Updated: 28 Nov 2018 6:18 PM GMT)

முதல்போக நெல் சாகுபடிக்காக மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் மதகை திறந்து வைத்தார்.

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை அமைந்துள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த அணைக்கு நீராதாரமாகும். அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். ‘கஜா’ புயல் காரணமாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து 70 அடியை எட்டியது.

இதையடுத்து அணையில் இருந்து முதல்போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் நேற்று மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் அணையில் மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், ‘மருதாநதி அணையில் இருந்து திறக் கப்பட்ட தண்ணீரின் மூலம் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 6 ஆயிரத்து 583 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதுதவிர கிணறு, ஆழ்துளை கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். தொடர்ந்து 90 நாட்களுக்கு அணையில் இருந்து 90 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது. எனவே ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த அய்யம்பாளையம், சித்தரேவு, தேவரப்பன்பட்டி மற்றும் நிலக்கோட்டை தாலுகாவில் சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி ஆகிய கிராம விவசாயிகள் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 70 அடியாக காணப்பட்டது. அணைக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த நீர் இருப்பு 157 மில்லியன் கனஅடி ஆகும்.

இந்த நிகழ்ச்சியின் போது, மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் குமார், மருதாநதி வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சவுந்திரம், அணையின் உதவி பொறியாளர் மோகன்தாஸ், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன், ஆத்தூர் தாசில்தார் பிரபா, சேவுகம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சக்திவேல், அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணகுமார், பட்டிவீரன்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், மற்றும் விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story