கஜா புயலால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கஜா புயலால் குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 11:30 PM GMT (Updated: 28 Nov 2018 6:56 PM GMT)

கஜா புயல் தாக்கிய நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

வேதாரண்யம்,

கஜா புயல் தாக்கியதால் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மனித உயிரிழப்பாக இதுவரை ஆண்கள் 7 பேர்; பெண்கள் 5 பேர், குழந்தை 1 உள்பட மொத்தம் 13 நபர்கள் கஜா புயலால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

1,11,132 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 20,998 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. 3,886 ஹெக்டேரில் தென்னை மரங்களும், 4,000 ஹெக்டேரில் நெற்பயிரும் சேர்த்து, 7,886 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

2,32,108 மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள மரங்களை வெட்டி அகற்றுவதற்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, மரங்களை அரசு முழுமையாக அகற்றி உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட நிலங்களில் உயர் தொழில் நுட்பத்தில் மீண்டும் மா, பலா, தென்னை, முந்திரி போன்ற மரங்கள் பயிரிடவும், ஊடுபயிர் செய்யவும் அரசு முழு உதவி செய்யும்.

பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் வாழ்ந்த குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் சுமார் 1 லட்சம் கட்ட அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்புத்திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒரு சிறப்பு செயலாக்க அமைப்பு உயர்நிலை ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அலுவலர் தலைமையில் அமைக்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் இன்னும் 5 நாட்களுக்குள் முழுமையாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட கடலோர கிராமத்தில், கடலால் ஏற்பட்ட சகதிகள் முழுவதையும் அகற்ற, அரசு செலவில் சகதிகளை வெளியேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுக்கும். அந்த நிலங்களை சீரமைக்க அரசு முயற்சி செய்யும்.

மத்திய, மாநில என இரண்டு அரசுகளுக்கும் பொறுப்பிருக்கின்றது. நாம் சேதமடைந்த விவரங்களை மத்திய அரசிற்கு தெரிவித்திருக்கின்றோம், எவ்வளவு நிதி தேவை என்றும் கோரியிருக்கின்றோம், முதற்கட்ட நிதி வேண்டுமென்றும் கேட்டிருக்கின்றோம். அவர்களும் மனசாட்சிப்படி, மனித நேயப்படி வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.

அரசைப் பொறுத்தவரைக்கும், எவ்வித தொய்வுமின்றி, மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து, நிவாரணங்கள் அளிக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இருக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், அவர்களுக்கு வேண்டிய குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற வசதிகள் தேவை என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அதன் அடிப்படையில், கிட்டத்தட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 3,000 ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டு வருகிறது. இன்றைக்கு படிப்படியாக மின்கம்பங்கள் சரிசெய்யப்பட்டு மின்சாரம் கொடுப்பதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் 45 நாட்களுக்குள் அந்தப் பணிகள் சீரடைந்துவிடும். அதனால், மக்களுக்கு மின்சாரம் கிடைத்து விடும், குடிநீரும் கிடைத்து விடும்.

மேலும், கூரைகளுக்கு தார்ப்பாய் கேட்டுள்ளார்கள், அதனையும் கொடுப்பதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதனை கொடுக்கின்ற பணியும் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக, அரசே, 2 வேட்டி, 2 சேலை, 10 கிலோ அரிசி, போர்வை, லுங்கி, துண்டு, குடை, சோப்பு, பாய், வாளி, மக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பால் பவுடர், எண்ணை 2 கிலோ, ரவை 2 கிலோ என அன்றாடத் தேவைகளுக்குத் தேவையான 27 பொருட்கள் அடங்கிய பெட்டிகளை நாகப்பட்டினத்தில் வழங்கியிருக்கின்றோம்.

இன்னும் 45 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுவிடும். இவையெல்லாம் கிடைக்கின்றபட்சத்தில், அவர்கள் முகாம்களில் இருந்து தங்கள் வீட்டுகளுக்குத் திரும்புகின்ற வாய்ப்பு ஏற்படும்.

பயிர் சேதத்தைப் பொறுத்தவரை, அனைத்தும் ஏற்கனவே கணக்கிடப்பட்டு அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பல லட்சம் நபர்கள் இதில் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள். அவற்றையெல்லாம் முறையாக கணக்கிட்டு, பாதிப்பிற்குத் தகுந்த மாதிரி, பகுதி குடிசை பாதித்திருந்தால் ரூபாய் 4,100, முழு குடிசையும் பாதிக்கப்பட்டிருந்தால் ரூபாய் 10 ஆயிரம் என நிவாரணம் அந்தந்த நபர்களின் பெயருக்கு வங்கிகளுக்கு பணம் அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை முதற்கட்டமாக ரூபாய் 1,300 கோடி ஒதுக்கியுள்ளோம். ஆகவே, மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை, இந்த அரசு மக்களுடைய அரசு, மக்களை பாதுகாக்கக்கூடிய அரசு, குறிப்பாக, ஏழை, எளிய, விவசாய மக்களை பாதுகாக்கக்கூடிய அரசு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் இந்த அரசால் தொய்வின்றி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story