புயலால் சேதம் அடைந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்


புயலால் சேதம் அடைந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:15 PM GMT (Updated: 28 Nov 2018 7:02 PM GMT)

நாகை மாவட்டத்தில், புயலால் சேதம் அடைந்த பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் நிவாரணம் மற்றும் வீடுகள் கட்டித் தரக்கோரி வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

நாகை மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகை மாவட்டத்தில் காலை 9 மணிக்கு ஆய்வு தொடங்கி மாலை 3.30 மணிக்கு வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு அருகே நிறைவு செய்தனர்.

முன்னதாக நாகை சுற்றுலா மாளிகை அருகே புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக வைக்கப்பட்ட புகைப்படக் காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். அதன் பின்னர் அவர்கள் புத்தூர் கிராமத்தில் உள்ள நாகை மாவட்ட அ.தி.மு.க.அலுவலகத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் கிராமத்திற்கு சென்று அங்கு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்த்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். உங்களின் வாழ்வாதாரத்திற்கு வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

பின்னர் விழுந்தமாவடி கிராமத்திற்கு சென்று அங்கு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும். நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அவர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கஜா புயலால் நீங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளர்கள். வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு அரசு தேவையான உதவியை அறிவித்துள்ளது. அரசு உதவி செய்து வருவது மட்டுமில்லாமல் உங்களுக்கு உதவி செய்வதற்காக அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை அனுப்பி வைத்தோம்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தேவையான நிவாரண ங்களை வழங்கி உள்ளார். போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் மிக முக்கியமான பிரச்சினையாகும். அதனை தீர்ப்பதற்காக கடற்கரை ஓரங்களில் 3,000 கைப்பம்புகள் அமைத்து குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் நன்றாக உள்ளது.

மீனவர்களின் படகுகள் அரை கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளன. வலைகளும் சேதம் அடைந்துள்ளன. இதனை அதிகாரிகள் கணக்கிடுகிறார்கள். தேவையான உதவிகளை அவர்களுக்கு இந்த அரசு வழங்கும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புயல் வரும் முன்பே அரசு முன்னெச்சரிக்கை விடுத்து இதன் அடிப்படையில் முகாம்கள் அமைத்து 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெரும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனாலும் புயலினால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அளவுக்கு சேதம் ஏற்படும் என்று நினைத்து பார்க்கவில்லை. நாங்கள் சென்ற இடங்களில் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகள், மாந்தோப்புகளை பார்க்கும்போது அங்கிருந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கூட இதுபோன்ற பாதிப்புகளை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 27 வகையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு தேவையான பொருட்கள் அரசு கொடுக்கிறது. 6 லட்சம் குடும்பங்களுக்கு இது வழங்கப்பட உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். புத்தகங்கள் சேதம் அடைந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் விழுந்தமாவடி கிராமத்தில் பாதிக்கப்பட்ட தென்னந்தோப்புகள் மற்றும் மரங்களை பார்வையிட்டார். பின்னர் வேட்டைக்காரனிருப்பு கிராமத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்த்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.அதன்பின்னர் கோவில்பத்து கிராமத்தில் ரூ.152 கோடியில் கட்டப்பட்டு புயலால் சேதமடைந்த தானிய சேமிப்புக் கிடங்கை பார்வையிட்டார். தொடர்ந்து வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, பெரியகுத்தகை, வாய்மேடு, வேதாரண்யம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று முகாம்களில் தங்கியிருந்தவர்களை பார்த்து குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்ட தென்னை மற்றும் மா மரங்களையும் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட நெற் பயிர்களையும் பார்வையிட்டார்.

புஷ்பவனம் கிராமத்தில் கடல் நீர் புகுந்ததால் அரை கிலோ மீட்டர் தூரம் இடுப்பளவிற்கு சேறு படிந்திருந்ததை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்கள், ஊருக்குள் படிந்துள்ள சேறு, சகதியை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அரசு அதி காரிகள் உடன் இருந்தனர்

Next Story