‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான இடங்கள் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான இடங்கள் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 29 Nov 2018 3:45 AM IST (Updated: 29 Nov 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைப்பதற்காக 3 இடங்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆரணி, 

ஆரணி, காந்தி ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டின் மேற்கூரைகள் கம்பி தெரியும் அளவிற்கு மிகவும் சேதம் ஏற்பட்டு இருந்தது. சமீபத்தில் பெய்த மழையில் 6 கடைகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. மற்ற கடைகளும் மோசமாக இருந்ததால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக காய்கறி மார்கெட் வளாகம் முழுவதையும் இடித்துவிட்டு புதிய காய்கறி வணிக வளாகம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கிருந்து வெளியேறிய வியாபாரிகள் தற்போது எந்த வசதியுமின்றி திறந்த வெளியில் வண்டிமேடு பகுதியில் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு நெருக்கடி உள்ளது குறித்து ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது.

அதன் எதிரொலியாக தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. தற்போது இடிக்கப்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான இடம் உள்ளது. நகராட்சி அலுவலகம் அகில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திலும் இடம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் இந்த இடங்களை பார்வையிட்டு இதில் ஏதாவது ஒரு இடத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கலாமா? அல்லது நகராட்சி வளாகத்திலேயே பாழடைந்த பொறியாளர்கள் குடியிருப்பு பகுதியை சுற்றிலும் உள்ள இடத்தில் அமைக்கலாமா? என 3 இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, நகராட்சி ஆணையாளர் கே.அசோக்குமார், பொறியாளர் கணேசன், வரைபடவாளர் பாலாஜி, ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் எம்.வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி பி.ஜி.பாபு உள்பட பலர் சென்றனர்.

தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்காலிக காய்கறி கடைகள் அமைப்பதற்காக நகராட்சி சாலையில் இருந்து வழி அமைக்கப்பட்டு இடம் சுத்தம் செய்து அளவீடு செய்யப்பட உள்ளது. அங்கு நகராட்சிக்கு வாடகை செலுத்தி வந்த காய்கறி வியாபாரிகளுக்கு மட்டும் இடம் ஒதுக்கி தருகிறோம். மின்விளக்கு வசதிகளும் செய்து தரப்படும்.

புதிய காய்கறி மார்கெட் வளாகம் அமைக்க ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது விரைவில் அந்த பணிகளும் தொடங்கப்படும். இதற்கு வியாபாரிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story