மும்பைக்கு சென்ற போது: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு


மும்பைக்கு சென்ற போது: ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு
x
தினத்தந்தி 29 Nov 2018 3:15 AM IST (Updated: 29 Nov 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

மும்பைக்கு சென்ற போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோழிக்கோடு, 

திருச்சூரை சேர்ந்தவர் அப்துல்காதர். இவருடைய மனைவி பானு. இவர்களது மகன் முகமது அலி (வயது 24) மும்பையில் வேலை பார்த்து வந்தார். இதையொட்டி முகமது அலிக்கும், மும்பையை சேர்ந்த தகிரா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டு, இவர்களது திருமணம் கடந்த 24-ந் தேதி திருச்சூரில் நடைபெற்றது.

பின்னர் தம்பதிகள் இருவரும் உறவினரின் வீடுகளுக்கு விருந்துக்காக சென்றனர். பின்னர் ரெயில் மூலம் மும்பைக்கு செல்வதற்காக திருவனந்த புரத்துக்கு வந்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து மும்பை செல்லும் ரெயிலில் 2 பேரும் புறப்பட்டனர்.

இந்த ரெயில் காசர்கோடு அருகே உள்ள கள்ளநாடு சுரங்கப்பாதை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாப்பிட்டு விட்டு கைகழுவ சென்ற முகமது அலி திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் அவரைத்தேடி தகிரா சென்றார். ஆனால் அவர் எந்த பெட்டியிலும் இல்லை.

உடனே அவர் மங்களாபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி விட்டார். பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் செய்தார். அப்போது அவர்கள் கள்ளநாடு பகுதியில் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும், அவரது உடலை காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வாடகை கார் மூலம் காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அங்கு ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தனது கணவர் முகமது அலி என்று தெரிந்தது. உடனே இதுகுறித்து திருச்சூரில் உள்ள கணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் காசர்கோடுக்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து மங்களாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 3 நாட்களில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தி உள்ளது. 

Next Story