பேராவூரணி அருகே கிராம மக்கள் சாலை மறியல் மின் வினியோகம் செய்ய கோரிக்கை


பேராவூரணி அருகே கிராம மக்கள் சாலை மறியல் மின் வினியோகம் செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி அருகே கிராம மக்கள் மின் வினியோகம் செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேராவூரணியும் ஒன்று. கடந்த 14 நாட்களாக மின் வினியோகம் இன்றி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். புயலுக்கு பின்னர் பேராவூரணியில் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே மின் வினியோகம் கிடைத்துள்ளது.

செங்கமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து அம்மையாண்டி வழியாக ஆவணம் கிராமத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மின் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் செங்கமங்கலத்துக்கும், ஆவணத்துக்கும் இடையில் உள்ள அம்மையாண்டி கிராமத்துக்கு மின் வினியோகம் செய்யப் படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அம்மையாண்டி கிராம மக்கள் உடனடியாக மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி பேராவூரணி-புதுக்கோட்டை சாலையில் அம்மையாண்டி பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மின் வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது இன்னும் 2 நாட்களுக்குள் மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைப்போல கஜா புயல் தாக்கியதில் ஒரத்தநாடு தாலுகாவில் வீடுகள், தென்னை, தேக்கு, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்தது. மேலும் இந்த புயலின்போது பெரும்பாலான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் ஒரத்தநாடு தாலுகா பகுதியில் பல கிராமங்களில் பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களுக்காக மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று சேத கணக்கெடுப்பு பணியை துரிதப்படுத்தி மக்களுக்கு உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி நேற்று ஒரத்தநாடு தாலுகா அலுவலகம் முன்பு புதூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன்பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story