பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.3 ஆயிரத்து 965 கோடி நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்


பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.3 ஆயிரத்து 965 கோடி நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் சார்பில் ரூ.3 ஆயிரத்து 965 கோடி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சாந்தா வெளியிட்டார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2019-20-ம் ஆண்டிற்கான நபார்டு வங்கியின் வளம் சார்ந்த வங்கிக்கடன் திட்டம் ரூ.3 ஆயிரத்து 965 கோடி அறிக்கையை கலெக்டர் சாந்தா வெளியிட்டார். அதன் பிரதியை கலெக்டரிடம் இருந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தா பேசுகையில், நபார்டு வங்கியின் மூலம் இந்த கடன் “2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்”என்ற நோக்கத்தை கொண்டது. அதாவது, விவசாயிகளை கால்நடை வளர்ப்புடன், உள்நாட்டு மீன்வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களிலும், விவசாயம் சாரா தொழில்களிலும் ஈடுபடுத்தி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க செய்தல் ஆகும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு...

இதில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் குறுந்தொழில்களுக்கு தனியாக வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த வளம் சார்ந்த கடனாற்றல் மதிப்பீடான ரூ.3 ஆயிரத்து 965 கோடியில் ரூ.3 ஆயிரத்து 238 கோடி வேளாண் துறைக்கும், ரூ.274 கோடி சிறு, குறு தொழில்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்கடன்

இது தவிர கல்விக்கடன், வீட்டுக்கடன், ஏற்றுமதி கடன் ஆகியவற்றிற்கு தனித்தனியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கியானது சிறு, குறு தொழில்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க முன் வரவேண்டும். மேலும் வங்கிக் கிளைகள் தங்களது ஆண்டுத் திட்ட அறிக்கையை தயாரிக்கும்போது நபார்டு வங்கியின் அறிக்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.கூட்டத்தில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் நவீன்குமார், இந்திய ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி துணை பொது மேலாளர் தியாகராஜன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அருள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சரவணபாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வங்கியாளர்கள் பங்கேற்றனர்.

Next Story