குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவால் மனவேதனை: வியாபாரி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது


குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவால் மனவேதனை: வியாபாரி தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 29 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் மனவேதனை அடைந்த இரும்பு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

திருச்சி,

திருச்சி வடக்குதாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது57). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது வீட்டின் எதிரே வசிப்பவர் ரெங்கராஜ். இவர் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், மனோகரனுக்கும் வீட்டின் முன்பு உள்ள சாக்கடை தொடர்பாக பிரச்சினை இருந்துவந்தது. இரு குடும்பத்தினரும் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சண்டையின்போது ரெங்கராஜின் மனைவி மனோரஞ்சிதம் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனின் மகனும், சுமை தூக்கும் தொழிலாளியான சுகன்ராஜ், உறவினர் அய்யப்பனை கைது செய்தனர். மேலும் மனோகரனின் மனைவி மற்றும் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் மனோகரன் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் மனோகரன் நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் விரைந்து வந்து ரெங்கராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மனோகரன் தற்கொலை செய்வதற்கு முன்பு 4 பக்கத்திற்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு இந்த துயர முடிவை எடுத்துள்ளார். அந்த கடிதத்தை மனோகரனின் குடும்பத்தினர் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில், “சாதாரண பிரச்சினையை கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து இழிவுபடுத்தி விட்டனர். இதனால் மனவேதனை அடைந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளேன். இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, ரெங்கராஜ் குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். ஒரு பாவமும் அறியாத என் (மனோகரன்) குடும்பத்தினரை விடுதலை செய்ய வேண்டும். என் குடும்பத்தினர் மீது வீண்பழி சுமத்தியவர்களை கைது செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்று எழுதியிருந்தார்.

கடிதத்தின் மற்றொரு பக்கத்தில், தனது முடிவினை கண்டு கலங்காமல் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும்படி தங்கை மஞ்சுளா, உமா, அக்கா பழனியம்மாள் ஆகியோருக்கு எழுதியிருந்தார். மேலும் இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு தெருவுக்கு குடிபோகுமாறும், அண்ணன், தம்பி, அக்கா அனைவரும் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும், ஆசையை நிறைவேற்றுங்கள் என்றும் எழுதியிருந்தார்.

மற்றொரு பக்கத்தில், பயத்தில் மது குடித்து தற்கொலை செய்ததாகவும், போலீசார் வழக்கை திசை திருப்பி விடுவார்கள் எனவும், இதனை தெரு மக்களும், சி.ஐ.டி.யூ. அமைப்பினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் எனக்கு உதவிட வேண்டும் என்று எழுதியிருந்தார். இதற்கிடையே மனோகரன் தற்கொலை குறித்து தகவல் அறிந்ததும் நேற்று இரவு பிரேத பரிசோதனை கூடம் முன்பு உறவினர்கள், குடும்பத்தினர், சி.ஐ.டி.யூ.வினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் திரண்டனர்.

மேலும் மனோகரன் தற்கொலைக்கு காரணமானவர்கள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மனோகரன் குடும்பத்தினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு மருத்துவமனை போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்று (வியாழக்கிழமை) மனோகரனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனை வளாகம் நேற்று இரவு பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையில் தற்கொலை செய்த மனோகரனின் மகன் சுகன்ராஜை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Next Story