ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு: கீழடியில் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
கீழடியில் மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் தமிழ் கூடல் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
யுனெஸ்கோவின் கணக்கெடுப்பின்படி உலக மொழிகளில் தமிழ்மொழி 14–வது இடத்தில் உள்ளது. தமிழ்மொழியை 10–வது இடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை செயல்பட்டு வருகிறது. முதல்–அமைச்சர் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழ் கூடல் விழாவின் முதல் நிகழ்ச்சி மதுரையில் நடக்கிறது. இதையடுத்து வாரம் ஒருமுறை தமிழ் அறிஞர்கள் பங்கு பெறும் இயல், இசை, நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5–வது கட்ட அகழ்வாராய்ச்சி நடத்த அனுமதி கிடைத்துள்ளது. 4–வது கட்ட ஆய்வில் கிடைத்த சில பொருட்களை கால நிர்ணயம் செய்வதற்கு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 38 அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகிறது. புதிதாக தேனி, திருவண்ணாமலை பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அதோடு சேர்த்து மொத்தம் 40 அருங்காட்சியகங்கள் செயல்படும். மேலும் 4 அருங்காட்சியகங்களை புதுப்பிக்க தலா ரூ.1 கோடி வீதம் ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சியில் 14,500 பொருட்கள் கிடைத்துள்ளது. அதில் முதல் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் மைசூருவிலும், 2, 3–வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் சென்னை தலைமை செயலக வளாகத்திலும், 4–வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் கீழடி அரசுப்பள்ளி வளாகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி அனைத்து பொருட்களையும் மத்திய தொல்லியல் துறைக்கு கொடுக்க வேண்டியது நமது கடமை. அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பொருட்களை எப்போது கேட்டாலும் நமக்கு திருப்பிக் கொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
வருகிற மார்ச் மாதத்திற்குள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்கள் போன்று, அழகன்குளம், ஆதிச்சநல்லூரிலும் அதிக அளவு பொருட்கள் கிடைத்திருக்கிறது. அங்கு அடுத்த கட்ட ஆய்வுக்கு தேவையான அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
அழகன்குளம், ஆதிச்சநல்லூரிலும் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். தமிழ் பல்கலைக்கழகத்தால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட பழங்குடியினர் பண்பாட்டு கழகம் சார்பில் ஊட்டியில் பழங்குடி மக்களின் கலாசார ரீதியான ஆய்வு செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் அங்கு உள்ளது. பழங்குடியினர் பற்றிய ஆய்வி கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் திருவள்ளூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் பழங்குடியினர் பற்றி தெரிந்து கொள்ள அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ஆய்வு நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.