கும்மிடிப்பூண்டி அருகே கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி அரசு பள்ளி முற்றுகை


கும்மிடிப்பூண்டி அருகே கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி அரசு பள்ளி முற்றுகை
x
தினத்தந்தி 29 Nov 2018 4:12 AM IST (Updated: 29 Nov 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கவரைப்பேட்டையில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்த 12–ம் வகுப்பு மாணவர்கள் சிலருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்வி உதவித்தொகையை அரசு பள்ளி நிர்வாகத்தினர் தங்களுக்கு உடனடியாக பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பள்ளியின் பழைய மாணவர்கள் 40 பேர் பள்ளியை முற்றுகையிட்டு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளிலும் இந்த நிலை இருந்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பள்ளிக்கு விரைந்து வந்தார். பின்னர் பள்ளி நிர்வாகிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இது தொடர்பாக ஏற்கனவே கல்வித்துறைக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதை பள்ளி நிர்வாகிகள் உறுதி செய்தனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story