மதுராந்தகம் அருகே பாலாற்றில் விரைவில் தடுப்பணை கட்டுமான பணி; கலெக்டர் தகவல்
மதுராந்தகம் அருகே பாலாற்றில் தடுப்பணை கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான நலன் காக்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வேளாண்மை துறை துணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் உள்ளிட்ட அனைத்து வட்டங்களையும் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, வட்டங்கள் வாரியாக விவசாயிகள் கோரிக்கைகள், குறைகளை எடுத்து கூறினர்.
அதில், ஏரி தூர்வாருதல், களக்காட்டூரில் துணை மின் நிலையம் அமைத்தல், விடுபட்டவர்களுக்கு கரும்பு நிலுவைத்தொகை வழங்குதல், நெல் கொள்முதல் நிலையம் கோருதல், தேசிய ஊரக வேலை திட்டத்தில் குடிமராமத்து பணிகள் வழங்குதல், மணிமங்கலம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் மதகுகள் சீரமைப்பு, ஏரிக்கரை சீரமைத்தல், நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்திருக்கும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், கிராம நிர்வாக அலுவலரை நியமித்தல், பனைமரங்களை பாதுகாத்தல், ஆற்று மணல் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.
அப்போது, கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் கலெக்டர் பேசியதாவது:–
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பதிலளிக்கப்பட்டும், தீர்வு காணப்பட்டும் வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை நல்ல விலைக்கு விற்கும் வகையில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தேவைக்கேற்ப திறக்கப்பட்டுள்ளன.
பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தது. அதன்படி, முதல் கட்டமாக, மதுராந்தகத்தை அடுத்த ஈசூர்–வள்ளிபுரம் பகுதி பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.29 கோடியே 70 லட்சம் செலவில் நபார்டு வங்கி உதவியுடன் பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி கூறுகிறேன்.
மேலும், கல்பாக்கம் அணுமின் நிலைய நிதி ரூ.32½ கோடியில் வாயலூரில் தடுப்பணை கட்டுவதற்கான தொழில்நுட்ப அனுமதியும் கிடைத்துள்ளது.
இதர 5 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கும் வருகிற மார்ச் மாதத்துக்குள் தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துவிடும். அதேபோல், தரைத்தளத்தில் இருந்தே தடுப்பணை கட்டப்படவுள்ளது. இதன்மூலம், 9 கிமீ தூரத்துக்கு நீரை சேமித்து வைக்கலாம். இதனால், நிலத்தடி நீரும் உயரும். விவசாயிகள் இனி 3 போகம் சாகுபடி செய்யலாம். எனவே, விவசாயிகள் இந்த விஷயத்தில் கவலைகொள்ள வேண்டாம். அதே போல், மணிமங்கலம் உள்ளிட்ட ஏரிகளின் மதகுகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, தற்போது ரூ.6½ கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதர ஏரிகளில் தூர்வாருதல், மதகுகள் சீரமைப்பு போன்ற பணிகளுக்கு பொதுப் பணித்துறை மூலம் தீர்வுகாணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீண்ட காலமாக ஓ.எம்.மங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர் இல்லை என்று விவசாயிகள் புகார் அளித்து வந்தனர். அதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்திலும் விவசாயிகள் இந்த விவகாரத்தை எழுப்பினர்.
அப்போது, உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை அந்த கிராமத்துக்கு நியமனம் செய்ய வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன், மதுராந்தகம் எம்.எல்.ஏ. புகழேந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்திரசேகரன், மாவட்ட வன அலுவலர் போஸலே சச்சின் துக்காராம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.