நடிகர் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க தாமதம் : கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் கடும் அதிருப்தி


நடிகர் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க தாமதம் : கர்நாடக அரசு மீது குடும்பத்தினர் கடும் அதிருப்தி
x

நடிகர் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க ஏற்பட்டுள்ள தாமதத்தால் கர்நாடக அரசு மீது அவருடைய குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெங்களூரு,

கன்னட நடிகரும், அரசியல்வாதியுமான அம்பரீஷ் கடந்த 24-ந் தேதி மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இவருடைய உடல் பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் தகனம் செய்யப்பட்டு உள்ளது. ேமலும், அங்கேயே நடிகர் அம்பரீசுக்கு நினைவிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷ்ணுவர்தன் மரணம் அடைந்து 9 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அவருக்கு நினைவிடம் அமைக்கவில்லை. இடப்பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களினால் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைப்பது தாமதமாகி வருகிறது. இதனால் அம்பரீசுக்கு நினைவிடம் அமைக்கும்போதே, நடிகர் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மேலும் நடிகர் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் கர்நாடக அரசு மீது அவருடைய குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து விஷ்ணுவர்தனின் மனைவி பாரதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

என் கணவர் விஷ்ணுவர்தன் மரணம் அடைந்து 9 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், அவருக்கு நினைவிடம் அமைக்க கர்நாடக அரசு முன்வரவில்லை. அபிமான் ஸ்டூடியோவில் உள்ள இடம் வழக்கில் சிக்கியது. முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசு விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க மைசூருவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இந்த நிலமும் பிரச்சினையில் உள்ளது. கர்நாடக அரசு சார்பில் விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் அமைக்க முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. விஷ்ணுவர்தனுக்கான நினைவிடத்தை மைசூருவில் தான் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக 9 ஆண்டுகள் அலைந்து விட்டோம். எங்களை யாரும் மதிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், கர்நாடக அரசு மீது விஷ்ணுவர்தனின் மருமகனும், நடிகருமான அனிருத்தும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். 

Next Story