தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரிக்கை


தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2018 5:30 AM IST (Updated: 29 Nov 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசு பள்ளிக்கல்வி துறை சார்பில், அரசு பள்ளிகளில் படிக்கும் 10–ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் கடந்த 6 ஆண்டுகளாக சிகரத்தை நோக்கி எனும் கையேடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அலுவலகத்தில் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கான சிகரத்தை நோக்கி என்ற கையேடு வெளியீடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி மாணவ–மாணவிகளுக்கு கையேட்டினை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் குப்புசாமி, முதன்மை கல்வி அதிகாரி ரங்கநாதன் உள்பட மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த கையேடு அனைத்து அரசு பள்ளிகளிலும் பயிலும் 5,764 மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சி முடிந்தவுடன் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி துறை மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிகரத்தை நோக்கி கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. கையேட்டில் முக்கிய வினா–விடைகள் இடம் பெற்றுள்ளன. இந்த கையேடு மூலமாக கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

மாணவர்களுக்கு 10–ம் வகுப்பு மதிப்பெண் மிகவும் முக்கியம். அது அவர்களுக்கு ஒரு மைக்கல் எனலாம். வருகிற அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு மாணவர்கள்–பெற்றோர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தற்போது அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

நீட் தேர்வுக்காக கடந்த ஆண்டில் புதுவையில் 8, காரைக்காலில் 2 என மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால் அரசு சார்பில் நடத்தப்பட்ட பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தனியார் மையங்களில் பணம் செலுத்தி மாணவர்களை படிக்க வைத்தனர். பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் கல்வி நிறுவனங்களில் படித்தால் நன்றாக படிப்பார்கள் என்ற போலியான நம்பிக்கை கொண்டுள்ளனர். தனியார் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதல் 10–ம் வகுப்பு வரை படிக்க சுமார் ரூ.3½ லட்சம் வரை செலவாகும். அதே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்து தங்களின் குழந்தைகளை மீது கவனம் செலுத்தினால் பணத்தை சேமிக்க முடியும்.

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்துவார்கள். அதேபோல் தனியார் பள்ளி மீது நேரடியாக புகார் அளிக்க முடியாதவர்கள் பெற்றோர் ஏதாவது சமூக அமைப்புகள் உதவியுடன் எழுத்துப்பூர்வமாக புகார்களை அளிக்கலாம். இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் புதுவை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தால், அப்போது தனியார் பள்ளிகள் கட்டாயம் விடுமுறை விட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக இயக்குனர், இணை இயக்குனர் ஆய்வு செய்து கண்டறிந்தால் முதல் தடவை எச்சரிக்கையும், 2–வது முறை பள்ளிகள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story