இயற்கை பேரிடர்களை சமாளிக்க நிதி தேவை; நீண்டகால திட்டங்களுக்கு ரூ.1,342 கோடி வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு நாராயணசாமி கோரிக்கை
காரைக்காலில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் நீண்ட கால திட்டங்களுக்கு ரூ.1,342 கோடி வழங்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் காரைக்காலிலும் கஜா புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் தென்னை மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. குடிசை வீடுகள் சரிந்து விழுந்தன. மீனவர்களின் படகுகள், வலைகள் சேதமடைந்தன. இதை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
டெல்லிக்கு சென்று புயல் சேதத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசை நாராயணசாமி வற்புறுத்தினார். சேதத்தை பார்வையிட மத்திய குழுவினரையும் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழக பகுதியில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்ட மத்தியக் குழு காரைக்கால் பகுதியில் ஏற்பட்ட சேதங்களையும் நேரில் பார்வையிட்டது. இதைத்தொடர்ந்து புதுவை வந்த அவர்கள் முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகளுடன் புயல்சேதம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.187 கோடி நிதி வழங்க மத்திய அரசிடம் சிபாரிசு செய்யுமாறு மத்தியக் குழுவினரை முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார். மேலும் புயல் சேத மதிப்பீடு குறித்து புதுவை மாநில அரசு தயாரித்த அறிக்கையையும் அந்த குழுவினரிடம் அவர் வழங்கினார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பது குறித்து முதல்-அமைச்சரின் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
புதுவை வந்த மத்தியக்குழுவிடம் காரைக்கால் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி புயல் மற்றும் நிவாரண பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.187 கோடி கேட்டு அறிக்கை அனுப்பி இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் காரைக்கால் மாவட்டம் சுனாமி, புயல், மழை, வெள்ளம், வறட்சி என தொடர்ச்சியாக இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டதை மத்தியக் குழுவிடம் எடுத்துரைத்து இந்த இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலும், அவற்றின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டும் காரைக்கால் மாவட்டத்திற்கென நீண்டகால திட்டங்கள் தேவையென்றும் இதற்காக ரூ.1,342 கோடி கூடுதலாக கேட்டு மத்தியகுழுவின் தலைவரிடம் அறிக்கை வழங்கினார். மேலும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளவற்றின் சாராம்சத்தையும், தேவையையும் மத்திய குழு உறுப்பினர்களிடம் விளக்கி கூறினார்.
மத்தியக்குழுவிடம் அளிக்கப்பட்ட அறிக்கையில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் புதைவட கம்பியின் மூலம் மின்சாரத்தை அனுப்புவதினால் புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் மின் கம்பங்கள் சேதமாவதை தடுக்கவும், யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கவும் முடியும். இதற்கென ரூ.180 கோடி ஒதுக்க வேண்டுமென்று கோரப்பட்டுள்ளது.
தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற ரூ.2.5 கோடி கோரப்பட்டுள்ளது. காரைக்காலில் உள்ள ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்திலும் 2, ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் ஒன்று என நவீன தொழில்நுட்பத்துடன் மொத்தம் 20 புயல் பாதுகாப்பு கூடங்கள் கட்டுவதற்கு ரூ.300 கோடி கேட்கப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த ரூ.30 கோடி செலவில் 5 படகு நிறுத்தங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
காரைக்காலில் உள்ள சுமார் 1,200 குடிசை வீடுகளை பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கல்வீடுகளாக மாற்றுவதற்கு ரூ.600 கோடி ஒதுக்கும்படி அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவடயனாறு ஆகிய ஆறுகளின் கடைமடை பகுதியாக இருக்கும் காரைக்கால் பகுதியினை மழை வெள்ள பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக அந்த ஆறுகளின் கரைகளை பலப்படுத்த ரூ.70 கோடி கேட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் ரூ.45 கோடி செலவில் நிவாரண மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமங்கள் அனைத்தையும் காரைக்கால் நகரப்பகுதி மற்றும் தமிழக பகுதியுடன் இணைத்திட ரூ.35 கோடியும், அப்பகுதிகளில் படகுதுறைகள் அமைத்திட ரூ.25 கோடியும் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. நீராதாரங்களை மேம்படுத்த படுதார்கொல்லை மற்றும் போலகம் ஆகிய இடங்களில் செயற்கை ஏரி அமைத்திட ரூ.12 கோடியும், மழைநீர் மற்றும் ஆற்றுநீரை சேமிக்க திருமலைராஜனாற்றில் கவுண்டன் தெருவிலும், அரசலாற்றில் அத்திப்படுகையிலும், வாஞ்சியாற்றில் சுப்பராயபுரத்திலும், நண்டலாற்றில் புளியந்தோப்பிற்கு அருகிலும் படுகை அணைகள் கட்ட ரூ.40 கோடி கேட்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரங்களில் மரங்களை வளர்த்து காற்றின் வேகத்தை குறைத்திடவும், சுனாமி போன்ற பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும், மரக்கன்றுகள் நடுவதற்காக ரூ.2 கோடியும், பேரிடர் தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளித்திட ரூ.10 கோடியும், பேரிடர் தொடர்பான முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதற்கான அறிவுக் களஞ்சியம் ஏற்படுத்திட ரூ.25 லட்சமும் கேட்கப்பட்டுள்ளது.
அடிக்கடி இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்படும் காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் போன்ற பகுதிகளுக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் சாலை மார்க்கமாக வருவதில் ஏற்படும் தடைகளையும், தாமதத்தையும், தவிர்ப்பதற்காக காரைக்காலில் ஒரு விமான நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story