விளாத்திகுளம் அருகே பொதுப்பாதையை அடைத்து வைக்கப்பட்ட தட்டியை அகற்ற வேண்டும் சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் உத்தரவு
விளாத்திகுளம் அருகே பூசனூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அங்காள ஈசுவரி கோவில் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது.
கோவில்பட்டி,
விளாத்திகுளம் அருகே பூசனூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அங்காள ஈசுவரி கோவில் மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த நிலையில் அங்கு செல்லும் பாதையை ஒரு தரப்பினர் தட்டியால் அடைத்து வைத்துள்ளனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. உதவி கலெக்டர் விஜயா தலைமை தாங்கினார். விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் இருதரப்பைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஊர் பொதுப்பாதையில் ஒரு தரப்பினரால் அடைத்து வைக்கப்பட்டுள்ள தட்டியை உடனே அகற்ற வேண்டும். அங்கு அங்கன்வாடி மையம் இருந்த பழைய இடத்திலேயே புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும். அதுவரையிலும் வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். மற்றொரு தரப்பினர் ஏற்கவில்லை. இதையடுத்து பூசனூரில் புதிய அங்கன்வாடி மையம் கட்டும் வரையிலும், இருதரப்பினருக்கும் இடையே எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்திட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.