கால்வாய் கரையோரம் கட்டப்பட்ட 15 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை


கால்வாய் கரையோரம் கட்டப்பட்ட 15 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 8:07 PM IST)
t-max-icont-min-icon

கால்வாய் கரையோரம் கட்டப்பட்ட 15 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் செட்டிகுளம் பூச்சாத்தான் குளம் பகுதியில் இருந்து வல்லன்குமாரவிளை வரை கோட்டார் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் (நீர்வள ஆதார அமைப்பு) அகற்றும் பணி அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வட்டவிளை பகுதியில் செல்லும் கோட்டார் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 15 வீடுகளை இடித்து அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த வீடுகளை அகற்றுமாறு 15 வீட்டின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது வீடுகளை அகற்றவில்லை.

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். இதையறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு, வீடுகளை இடித்து அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம் முன் போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றிய தகவல் அறிந்த அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அசோகன் அதிகாரிகளிடம் கூறுகையில், இங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கியபிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். இதையடுத்து அதிகாரிகள் 29–ந் தேதி (அதாவது நேற்று) வரை கால அவகாசம் வழங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதற்கிடையே தகுதி உள்ள 14 குடும்பத்தினருக்கு இறச்சகுளத்தில் இருந்து களியங்காடு செல்லும் பகுதியில் நாவல்காடு அருகே மாற்று இடம் வழங்கப்பட்டது. தகுதி இல்லாத ஒரு குடும்பத்தினருக்கு மட்டும் மாற்று இடம் வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து கால்வாய் கரையோரம் ஆக்கிரமித்து கட்டியிருந்த 15 வீடுகளிலும் உள்ள பொருட்களை அவர்கள் தாமாகவே அகற்றினர்.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அந்த 15 வீடுகளையும் பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து அகற்றினர். அந்த வீடுகளில் குடியிருந்தவர்கள் இதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதேபோல் கோட்டார் கால்வாய் கரையோரத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கும் மாற்று இடம் வழங்க அ.தி.மு.க. சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக எஸ்.ஏ.அசோகன் தெரிவித்தார்.

Next Story