ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு


ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது  தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 3:00 AM IST (Updated: 29 Nov 2018 8:19 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தூத்துக்குடி, 

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

பொதுநல வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று பாசனத்தின் மூலமாக 46 ஆயிரத்து 107 ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனை நம்பி பல ஆயிரக்கணக்கான விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘‘கார், அட்வான்ஸ் கார், பிசானம்” என முப்போக சாகுபடி நடந்தது.

இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து விவசாயம் மற்றும் பொதுமக்களின் குடிநீருக்கான தண்ணீரை தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தினமும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பின்பு தாமிரபரணி பாசனக் கால்வாய்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைப்பதே அரிதாகி, முப்போக நெற்பயிர் சாகுபடி ஒருபோகமாக மாறியது.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் வழங்குவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று நான் (ஜோயல்) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.

தண்ணீர் எடுக்க தடை

இந்த பொதுநல வழக்கில் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. நீதிபதிகள் எஸ்.பி.வாங்கடி, கே.ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் டாக்டர் நாகின் நந்தா அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்தது. ஜோயல் சார்பில் மூத்த வக்கீல் ரித்விக் தத்தா ஆஜராகினார்.

வழக்கு விசாரணையின் முடிவில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். வனத்துறைக்குரிய இடத்தில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் அதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் முறையாக பெற வேண்டும். ஆனால் இதில் விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாடு குடிநீர் வழங்கல்–வடிகால் வாரியத்தினர் இதில் திட்டமிட்டே ‘‘குடிநீர் தேவை” என்ற பொய்யான காரணத்தை சொல்லி தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கி வந்துள்ளனர். எனவே ‘‘முழுக்க முழுக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை உட்பட எந்த தொழிற்சாலைக்கும் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜோயல் தெரிவித்து உள்ளார்.


Next Story