கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Nov 2018 11:00 PM GMT (Updated: 29 Nov 2018 5:10 PM GMT)

கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களை கலெக்டர் பிரபாகர் வழங்கினார். இதைத்தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் பெங்களூரு சாலை வழியாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக அரசு வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே சேகரிக்கப்பட்டு மறு சுழற்சிக்குள்ளாக்கப்பட்டு வெவ்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மீதமுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் குறிப்பாக மெல்லிய பிளாஸ்டிக் பைகளும், பிளாஸ்டிக் கப்களும் தரையில் சிதறினாலோ அல்லது குப்பை குவியல் களுடன் சேர்ந்து சுகாதார சீர்கேட்டை விளை விக்கின்றன.


இதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதில்லை. நிலத்தில் போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பூமிக்கு நீர் புகாமல் தடுத்து விடுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகள்் திறந்த சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் போடுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி தொற்று நோய் கிருமிகளும் உற்பத்தியாகின்றன. பிளாஸ்டிக்கில் உள்ள வேதிபொருட்கள் நிலத்தின் தன்மையையும், நீரின் தன்மையையும், பாதிக்கின்றன.

மெல்லிய பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட எஞ்சிய உணவு பொருட்களை போடுவதால் விலங்குகளும், கால்நடைகளும் உணவாக சேர்த்து பைகளையும் உண்ணுகின்றன. மெல்லிய பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்ச்சி செய்ய இயலாது. எனவே துணி காகிதம் மற்றும் சணல் பைகளை பயன்படுத்துங்கள். தென்னை காகிதம் மற்றும் கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தங்கள். உணவு பொருட்களை கட்டவும் சாப்பிடவும், வாழை இலைகளை பயன்படுத்துங்கள்.

இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகேஷ்வரி, ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஷ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு கோட்ட அலுவலர் பழனிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், கிருஷ்ணகிரி அனைத்து வணிகர் சங்க தலைவர் கேசவன், ஓட்டல் சங்க தலைவர் ஆரியபவன் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரசன்ன வெங்கடேசன், தாசில்தார் சேகர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story