கிருஷ்ணகிரியில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்ட விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மாவட்ட முதன்மை நீதிபதி கலாவதி பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் கொத்தடிமை தொழில்முறை ஒழிப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு, கிருஷ்ணகிரி இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டம் சார்ந்த தன்னார்வாளர்களுக்கான கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு சட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஜி.கலாவதி தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
இதில் மக்கள் நீதிமன்ற தலைவர் கே.அறிவொளி, விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.அன்புசெல்வி, தலைமை குற்றவியல் நீதிபதி கே.பாலசுப்பிரமணியம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தஸ்னீம், கிருஷ்ணகிரி நீதிமன்ற நீதிபதிகள் யு.மோனிகா, கே.ஆர்.லீலா, என்.சுல்தான் அர்பீன், என்.எஸ்.ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட வருவாய் துறை சார்பில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இந்த சட்டம் மற்றும் அவர்களின் அனுவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.கலாவதி பேசியதாவது:-
கொத்தடிமைகள் அதிகமாக செங்கல் சூளைகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கே தாங்கள் கொத்தடிமைகளாக இருக்கிறோமா என்பதை தெரியாமலும், எப்படி விடுபடுவது, யாரை அணுகுவது என்றும் தெரியாமல் கொத்தடிமைகளாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு கொத்தடிமைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து தன்னார்வலர்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தன்னார்வலர்கள் நன்கு பயிற்சி பெற்று பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெற்று கொத்தடிமை தொழிலில் இருந்து விடுபட உதவியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story