தர்மபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரைவில் கணினி மின்நூலகம் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தகவல்
தர்மபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விரைவில் கணினி மின்நூலகம் திறக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி தெரிவித்தார்.
நல்லம்பள்ளி,
நல்லம்பள்ளி அடுத்த லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கணினி மின்நூலக வகுப்பறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கலந்துகொண்டு, பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி மின்நூலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:- அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் அறிவுத்திறனை வளர்க்கும் விதமாக, அரசு பல்வேறு டிஜிட்டல் முறை கல்வி திட்டத்தை கொண்டு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக, உலக நிகழ்வை கணினி மூலம் தெரிந்துகொண்டு தங்களது அறிவுத்திறனை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் வளர்த்துக்கொள்ளும் விதமாக தற்போது முதற்கட்டமாக கடத்தூர் மற்றும் லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணினி மின்நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்த கணினி மின்நூலகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளும் உலக நிகழ்வையும், தங்களது படிப்பு சார்ந்த சந்தேகங்கள், அரசு பொது தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் மற்றும் தங்களது பாடப்புத்தகம் தொடர்பான கேள்விக்கான பதிலை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அன்றாட உலக நிகழ்வை கணினி செய்தி தாள்கள் மூலம் தெரிந்துகொள்வது போன்ற எண்ணற்ற விஷயங்களை தெரிந்துகொள்ளும் விதமாக இந்த கணினி மின்நூலக வகுப்பறை திறக்கப்பட்டு, கணினி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விரைவில் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளின் நலன்கருதி, கணினி அறிவுத்திறனை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதமாக, கணினி மின்நூலகங்கள் படிப்படியாக திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பொன்முடி, உஷாராணி, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்(எஸ்.எஸ்.ஏ.) வெங்கடேசன், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஆர்.எம்.எஸ்.ஏ.) தங்கவேலு உள்ளிட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியை ரோஸினாள் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story