கெலமங்கலம் அருகே கெட்டுப்போன பழங்களை தின்ற 2 மாடுகள் செத்தன
கெலமங்கலம் அருகே கெட்டுப்போன பழங்களை தின்ற 2 மாடுகள் செத்தன.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பிதிரெட்டி ஊராட்சிக்கு உட்பட்டது கவுதாளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மனைவி புஜ்ஜம்மா. விவசாயிகளான இவர்கள் 2 மாடுகளை வளர்த்து வந்தனர். இவர்கள் வழக்கம் போல நேற்று தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றனர்.
கவுதாளம் ஆற்றுபாலம் அருகில் யாரோ கெட்டுப் போன வாழைப்பழங்களை சாலையோரமாக கொட்டி சென்றிருந்தனர். அந்த பழங் களை மாடுகள் தின்றன. இந்த நிலையில் பழங்களை தின்ற சிறிது நேரத்தில் 2 மாடுகளும் வயிறு வீங்கி அடுத்தடுத்து செத்தன. இந்த மாடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் ஆகும்.
மாடுகள் இறந்ததை கண்டு கிருஷ்ணப்பாவும், புஜ்ஜம்மாவும் கதறி அழுதனர். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தேன்கனிக்கோட்டை அருகே கெட்டுப்போன பழங்களை சாப்பிட்ட 2 மாடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story