ராயக்கோட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தியவர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை


ராயக்கோட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தியவர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2018 3:45 AM IST (Updated: 29 Nov 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை அருகே ஏலச்சீட்டு நடத்தியவர் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப் பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள அயர்னப்பள்ளி ஊராட்சி நல்லராலப்பள்ளியைச் சேர்ந்தவர் முனியப்பன். இவருக்கு அந்த பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவர் நேற்று தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பிணமாக தொங்கியவர் பேண்ட் மட்டும் அணிந்திருந்தார். சட்டை அணியவில்லை. அவருக்கு வயது 30 இருக்கும்.

மேலும் சிறிது தூரத்தில் மதுபாட்டில், ஆசிட் பாட்டில், செருப்பு, சட்டை ஆகியவையும் இருந்தது. இதையடுத்து தூக்கில் பிணமாக தொங்கியவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லைச் சேர்ந்த குட்டியப்பா என்பவரின் மகன் முனிராஜ் (வயது 33) என்பதும், அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இவர் நல்லராலப்பள்ளியைச் சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகள் பவித்ரா என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு யஷ்வந்த் என்ற 4 வயது மகனும், தனு என்ற 2 வயது மகளும் உள்ளனர்.

அவரது கை, கால்களில் காயங்கள் இருந்தன. அவர் ஏதேனும் தொழிலில் நஷ்டம் அடைந்து அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஏலச்சீட்டு விவகாரத்தில் யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்று ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story