லஞ்ச வழக்கில் சிக்கிய வணிகவரித்துறை ஊழியர்கள் 5 பேர் பணிநீக்கம் முதன்மை செயலாளர் நடவடிக்கை


லஞ்ச வழக்கில் சிக்கிய வணிகவரித்துறை ஊழியர்கள் 5 பேர் பணிநீக்கம் முதன்மை செயலாளர் நடவடிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2018 4:00 AM IST (Updated: 29 Nov 2018 11:29 PM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் சிக்கிய வணிகவரித்துறை ஊழியர்கள் 5 பேரை பணிநீக்கம் செய்து வணிகவரிகள் துறை முதன்மை செயலாளர் சோமநாதன் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வணிகவரித்துறை (ஊரகம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பொதுமக்களிடமும், வணிக நிறுவன உரிமையாளர்களிடமும் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்செங்கோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 725 பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த துணை வணிகவரி அலுவலர் கருணாகரன் (வயது 60), பதிவறை எழுத்தர் ராஜேந்திரன் (58), உதவியாளர்கள் மயில்சாமி (49), செல்வகுமார் (55), ரங்கசாமி (50) ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரும் வேறு அலுவலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேர் மீதும் கோவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின் முடிவில் 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை வணிகவரிகள் துறை முதன்மை செயலாளர் சோமநாதன், துணை வணிகவரி அலுவலராக பணியாற்றி வந்த கருணாகரன் உள்பட 5 பேரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்களில் கருணாகரனுக்கு 60 வயது ஆனாலும், வழக்கு நிலுவையில் இருந்ததால் ஓய்வுபெற அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story