சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அளவீடு பணி: அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு


சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அளவீடு பணி: அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Nov 2018 4:00 AM IST (Updated: 29 Nov 2018 11:49 PM IST)
t-max-icont-min-icon

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் அளவீடு பணிக்கு சென்ற அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையம் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது. காமலாபுரம், பொட்டியபுரம், தும்பிப்பாடி, சிக்கனம்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்கள் இந்த விரிவாக்கத்துக்கு எடுக்கப்படுகிறது.

ஆனால் விமான நிலைய விரிவாக்கத்துக்கு விவசாய விளைநிலங்களை கையகப்படுத்தக்கூடாது, என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதையொட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்தநிலையில் கடந்த 26-ந்தேதி விமான நிலைய விரிவாக்க நிலம் எடுப்பு தனி தாசில்தார்கள் பெரியசாமி, சாந்தி மற்றும் வருவாய்த் துறையினர் தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே ஒரு விவசாய தோட்டத்துக்கு நிலம் அளவீடு செய்யும் பணிக்காக சென்றனர். இதை அறிந்ததும் அந்த பகுதி விவசாயிகள் உள்பட பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவர்களிடம், ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தருவதாக கூறியதன் பேரில் அந்த நிலத்தை அளவீடு செய்ய கணக்கெடுக்கும் பணிக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனாலும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு விளை நிலங்களை எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தி சிலர், அந்த விவசாயியின் கிணற்றின் மேல்பகுதியில் நின்று கொண்டு கிணற்றுக்குள் குதிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த நிலத்தை அளவீடு செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து தும்பிப்பாடி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) குணசேகரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், விமான நிலைய விரிவாக்கத்துக்காக சண்முகம் என்பவருடைய நிலத்தில் அளவீடு செய்யும் பணிக்காக அதிகாரிகள் சென்றபோது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து, கலகம் செய்யும் நோக்கத்தோடு கூட்டமாக சிலர் வந்து அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர், என குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி விசாரணை நடத்தி தொட்டியபுரம் பம்பரபட்டியானூர் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 30), தும்பிப்பாடி கிருஷ்ணன் (60), துருவரெட்டியூர் விஜய் (30), சின்னபையன் (60), குமரவேல் (42), எல்லப்பன் (45) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story