பங்களாப்புதூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு


பங்களாப்புதூர் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Nov 2018 10:45 PM GMT (Updated: 29 Nov 2018 6:51 PM GMT)

ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.





டி.என்.பாளையம், 

கோபியை அடுத்து பங்களாப்புதூர் அருகே உள்ள கொண்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அர்த்தநாரீஸ்வரன் (வயது 63). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி சண்முகவள்ளி (60). இவர்களுக்கு இளமுருகு என்ற மகனும், பன்மலர் என்ற மகளும் உள்ளனர். பன்மலர் திருமணமாகி குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளமுருகு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அர்த்தநாரீஸ்வரன் தன்னுடைய மகளை பார்க்க அமெரிக்க செல்ல முடிவு செய்தார். அதன்படி அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டார். மேலும், இளமுருகு வீட்டை பூட்டி பெங்களூருவில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

நேற்று காலை அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அர்த்தநாரீஸ்வரனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து இளமுருகு மற்றும் அவரின் உறவினரான அதேப்பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த தங்கவேல் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் நகையை காணவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்துகொண்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story