பரிதவிக்க வைத்த புயல், மிரட்டி வரும் மழை: டெல்டாவில், வீடுகளை இழந்த மக்களின் துயரம் நீடிக்கிறது


பரிதவிக்க வைத்த புயல், மிரட்டி வரும் மழை: டெல்டாவில், வீடுகளை இழந்த மக்களின் துயரம் நீடிக்கிறது
x
தினத்தந்தி 30 Nov 2018 4:45 AM IST (Updated: 30 Nov 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

புயல் பரிதவிக்க வைத்து சென்ற நிலையில், டெல்டா பகுதியில் பெய்து வரும் கன மழை மக்களை மிரட்டி வருகிறது. இதனால் புயலில் வீடுகளை இழந்த மக்களின் துயரம் தொடர்ந்து நீடிக்கிறது. உறைவிடத்தை தேடி மக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

புயல் பாதிப்பில் இருந்து காவிரி டெல்டா மாவட்ட மக்கள் இன்னும் மீளவில்லை. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் ‘கஜா’ புயலுக்கு பின்னர் இருண்ட பிரதேசங்களாகி விட்டன. பொதுவாக சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கையின் சீற்றங்கள் உயிர் சேதங்களை அதிக அளவு ஏற்படுத்தி சென்று விடும்.

ஆனால் டெல்டாவில் வீசிய “கஜா” புயல், இனிமேலும் உயிர் வாழ வேண்டுமா? என்ற நிலையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம், திருச்சிற்றம்பலம், திருவாரூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வந்த விவசாயிகள், மீனவர்கள், விவசாய தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களின் ஒட்டு மொத்த வாழ்நாள் உழைப்பை, சேமிப்பை ஒரே நாளில் சூறையாடிய புயல், அவர்களை பரிதவிக்க வைத்திருப்பது தான்.

காரைக்கால், அக்கரைப்பேட்டை, வேதாரண்யம், புஷ்பவனம், விழுந்தமாவடி, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கரையூர் தெரு, சேதுபாவாசத்திரம், கள்ளிவயல்தோட்டம், மல்லிப்பட்டினம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் படகுகளை இழந்த மீனவர்கள் இனி மேலும் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட பல மாதங்களாகும் என கண்ணீர் வடிக்கிறார்கள். தென்னை விவசாயிகளின் சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வீடுகளை இழந்தவர்கள், நிவாரண முகாம்களில் நிலவும் இட நெருக்கடியால் சாலையோரத்தையும், பயணிகள் நிழலகத்தையும், மாட்டு வண்டிகளையும் தற்காலிக குடியிருப்புகளாக மாற்றி தினம், தினம் செத்து பிழைக்கிறார்கள்.

இருந்ததே ஒரே ஒரு குடிசை வீடு. அதையும் புயல் சுருட்டி சென்று விட்டதால், மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான “உறைவிடம்” கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பரிதாபங்கள் ஒரு பக்கம் இருக்க கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை டெல்டா மக்களை மிரட்டி, கடும் இன்னலுக்கு ஆட்படுத்தி வருகிறது.

நிவாரண முகாமில் நிலவும் இட நெருக்கடியால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டும் மழையில் உறைவிடத்தை தேடியும் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கூரை வீட்டின் ஒரு பகுதியை தார்ப்பாய்கள் கொண்டு மூடினாலும் கனமழையை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறுகிறார்கள். நிவாரண முகாம்களில் இன்னும் எத்தனை நாளைக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்பது அவர்களின் கவலை தோய்ந்த கேள்வி.

நேற்று டெல்டாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. திருத்துறைப்பூண்டி, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, அதிராம்பட்டினம், நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் டெல்டா பகுதிகளில் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 103 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

மற்ற இடங்களில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவுகளில் வருமாறு:-

சீர்காழி-61, மயிலாடுதுறை-40, கும்பகோணம்-36, பாபநாசம்-32, வேதாரண்யம்-29, மதுக்கூர்-26, நன்னிலம்-21, திருவாரூர்-21, மன்னார்குடி-20, குருங்குளம்-17, வல்லம்-16, பட்டுக்கோட்டை-16, முத்துப்பேட்டை-15, ஒரத்தநாடு-11, அதிராம்பட்டினம்-11, கோரையாறு-11, தஞ்சை-7, பேராவூரணி-7, பூதலூர்-5, நாகை-1.

‘கஜா’ புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு கூறி உள்ளது. ஆனால் அதற்கு இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என தெரியவில்லை. மழை பெய்து வரும் நிலையில் புதிய வீடு கட்டும் பணிகள் உடனடியாக தொடங்குமா? வீட்டை இழந்தவர்கள், புதிய வீடு கட்டி முடிக்கப்படும் வரை எங்கு வசிப்பார்கள்? என்பன போன்ற கேள்விகள் டெல்டாவில் துயரம் நீடிக்கிறது என்பதையே காட்டுகிறது. 

Next Story