பூந்தமல்லி அருகே போலீஸ்காரர் மனைவி மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்


பூந்தமல்லி அருகே போலீஸ்காரர் மனைவி மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிதி நிறுவனத்தில் போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடி, அம்மன் கோவில் தெருவில் தனியாருக்கு சொந்தமான நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிதி நிறுவன இயக்குனரான உமா மகேஸ்வரி, பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருபவர் தங்கராஜ். இவருடைய மனைவி வசந்தி. இவர், எங்கள் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பல பேரை எங்கள் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளராக சேர்த்தும் விட்டு உள்ளார்.

எங்கள் நிறுவனத்தில் வசந்தி ரூ.10 லட்சம் சீட்டு பணம் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவர் சீட்டு பணத்தை செலுத்தவில்லை. வேலைக்கும் வரவில்லை. அவரது செல்போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மோசடி புகார் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் போலீஸ்காரரின் மனைவி வசந்தி, பல பேரை இந்த நிதி நிறுவனத்தில் சேர்த்து உள்ளார். அதில் சிலர் சீட்டு பணத்தை எடுத்துவிட்டு திரும்ப கட்டாமல் உள்ளனர்.

அந்த தொகையை, அவர்களை சேர்த்து விட்ட வசந்தியிடம் நிதி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story