மின்கேபிள் பதிக்கும் பணியில் குழாய் உடைந்தது குடிநீர் இல்லாமல் 10 நாட்களாக தவிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


மின்கேபிள் பதிக்கும் பணியில் குழாய் உடைந்தது குடிநீர் இல்லாமல் 10 நாட்களாக தவிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2018 4:00 AM IST (Updated: 30 Nov 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

மின்கேபிள் பதிக்கும் பணியின்போது குழாய் உடைந்ததால் 10 நாட்களாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு, 

ஈரோடு மாநகர் பகுதியில் மின்சார புதைகேபிள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழி தோண்டப்பட்டு மின்கேபிள் பதிக்கப்படுகிறது.

ஈரோடு சூரம்பட்டி மாரப்ப முதல் வீதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின்கேபிள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக குழி தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரிசெய்யப்படாததால் அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

மாரப்ப முதல் வீதியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மின்கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகமும் நிறுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களாக நாங்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். சமையல் செய்வதற்கும், மற்ற தேவைகளுக்கும் ஆழ்துளை கிணற்று தண்ணீரையே பயன்படுத்தி வருகிறோம். குடிநீரை காசு கொடுத்து வெளியே வாங்க வேண்டியுள்ளது.

குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்துவிட்டோம். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story