தொடர் கொள்ளை: ராமநாதபுரத்தை கலக்கிய இலங்கை அகதிகள் 4 பேர் கைது - 84 பவுன் நகை பறிமுதல்


தொடர் கொள்ளை: ராமநாதபுரத்தை கலக்கிய இலங்கை அகதிகள் 4 பேர் கைது - 84 பவுன் நகை பறிமுதல்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் கொள்ளையடித்த இலங்கை அகதிகள் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 84 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம், 


ராமநாதபுரம் ஆத்மநாதசாமிநகர் 1-வது வடக்குத்தெருவை சேர்ந்த தேவபிரியன் மகன் அண்ணாதுரை. இவருடைய வீட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதேபோல, கடந்த அக்டோபர் 30-ந் தேதி லாந்தை காலனி பகுதியில் வைதேகி என்பவரின் வீட்டில் பீரோவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

இதுதவிர, பரமக்குடி மற்றும் உச்சிப்புளி பகுதிகளில் வீட்டு பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் செல்போன் உள்ளிட்டவைகள் கொள்ளைஅடிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் ராமநாத புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து கொள்ளை கும்பலை தேடிபிடிக்க கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைஅரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி, போலீசார் பட்டாபிராமன், ராஜகோபாலன், வளத்தீஸ்வரன், பாண்டியராஜன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவிட்டார். இந்த தனிப்படையினர் கொள்ளை கும்பலை தேடிவந்தனர்.

இந்நிலையில் தனிப்படையினர் ராமநாதபுரத்தில் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் அந்த 4 நபர்களும் இலங்கை அகதிகள் என்பது தெரிந்தது.

விசாரணையில் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த ஜெயந்தன் என்ற ரதீசன்(வயது26), விஜிதரன்(32), பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டி பட்டிணம் அகதிகள் முகாமை சேர்ந்த பார்த்திபன் என்ற தீபன் (27), திருப்பூர் பெருமநல்லூர் ஆண்டிபாளையம் குட்டகருப்பையா கோவில் தெருவை சேர்ந்த தர்மகுமார் என்ற தர்மா(37) ஆகியோர் என்பதும் இவர்கள் தான் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ஒரு செல்போன், 26 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தனிப்படை போலீசார் 4 பேரையும் அழைத்து வந்து மேல்விசாரணை செய்தபோது மேற்கண்டவர்கள் ஆரம்பத்தில் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்துள்ளனர். இதன்பின்னர் பார்த்திபன், தர்மகுமார் ஆகியோர் வேறு முகாம்களுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் ஜெயந்தன் என்ற ரதீசன் தொண்டியில் இருந்து கள்ளத்தோணி மூலமாக இலங்கை செல்ல முயன்றபோது கைதாகி சென்னை புழல்சிறையில் அடைக்கப்பட்டான். அங்கு சாந்தகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வேறுசில அகதிகளான சுபாஷ் மற்றும் நாகேஸ்வரன் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

சுபாஷ் மேற்கண்ட 4 பேரிடமும் வீடுகளில் கொள்ளையடித்தால் நன்றாக நிம்மதியாக வாழலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். அவருடைய ஆசைவார்த்தையை நம்பிய மேற்கண்ட 4 பேரும் பெயிண்டிங் வேலைக்கு செல்வது போல் சென்று வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இந்த நகைகளை தர்மகுமார்தான் விற்பனை செய்து கொடுத்துள்ளார். இந்த பணத்தில் கொள்ளையடிக்க வழிகாட்டிய சுபாஷிற்கும் பங்கு கொடுத்துள்ளனர்.

இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 58 பவுன் தங்க நகைகளை பறிமுதல்செய்தனர். மொத்தம் 84 பவுன்நகைகளையும், மோட்டார்சைக்கிள்கள், செல்போன் முதலியவற்றை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரிடமும் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இலங்கை அகதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா பாராட்டினார்.

Next Story