பொது மக்களுடன் சென்று வங்கியை, எம்.எல்.ஏ. முற்றுகையிட்டதால் பரபரப்பு


பொது மக்களுடன் சென்று வங்கியை, எம்.எல்.ஏ. முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 3:45 AM IST (Updated: 30 Nov 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

கடன் வழங்க மறுப்பதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து தனவேலு எம்.எல்.ஏ. பொது மக்களுடன் சென்று வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

பாகூர்,

பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் வங்கி கடன் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தனவேலு எம்.எல்.ஏ. வங்கி அதிகாரிகளை அழைத்து பேசி விவசாயிகள், மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, கடன் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனாலும் கடன் கேட்டு செல்லும் விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி அதிகாரிகள் கடன் வழங்காமல் இழுத்தடிப்பதாக மீண்டும் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் தனவேலு எம்.எல்.ஏ. நேற்றுக் காலை கன்னியக்கோவில் கிராமத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது அருகில் உள்ள வங்கிக்கு வந்திருந்த கிராம மக்கள் எம்.எல்.ஏ.வை சந்தித்து தங்களுக்கு வங்கி அதிகாரிகள் கடன் தராமல் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து புகார் தெரிவித்த பொது மக்களுடன் தனவேலு எம்.எல்.ஏ. மணப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்று முற்றுகையிட்டார். மேலும் வங்கி அதிகாரிகளை சந்தித்து பொது மக்களுக்கு கடன் தராமல் இழுத்தடிப்பது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு செய்தால் அதனை நிராகரிப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் பொது மக்கள் கடன் கேட்டால் அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வங்கி அதிகாரிகள் கூறினார். அதனை ஏற்று தனவேலு எம்.எல்.ஏ. பொது மக்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story