அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வேலையை செய்கிறார் கவர்னர் கிரண்பெடி மீது, நாராயணசாமி குற்றச்சாட்டு
அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வேலையை கவர்னர் கிரண்பெடி செய்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதல் இன்றுவரை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியங்களுக்கு 95 சதவீத நிதியை அரசாங்கம் கொடுத்து வருகிறது. இதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதுவும் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் புதுவையில் 26 பள்ளிகளும், காரைக்காலில் 8 பள்ளிகளும், ஏனாமில் ஒரு பள்ளியும் பயனடைந்து வருகின்றன.
இந்த பள்ளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அரசு சார்பில் ரூ.12.92 கோடி சம்பளமாகவும், ரூ.58 லட்சம் ஓய்வூதியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக புதுவை பட்ஜெட்டில் இருந்து ரூ.44 கோடி ஒதுக்கி உள்ளோம். அந்த பட்ஜெட் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தநிதியின் மூலம் 26 ஆயிரத்து 568 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். பள்ளிகளுக்கு 95 சதவீத நிதியை வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. தமிழகத்திலும் இதே நிலை உள்ளது.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக இந்தமுறை கோப்பு அனுப்பும்போது, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி கொடுப்பதை படிப்படியாக குறைக்க கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார். அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. ஏழை மாணவ, மாணவிகள் பெருமளவு கட்டணம் செலுத்தி படிக்க முடியாது என்பதால் இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கவர்னரின் கருத்து மற்றும் பரிந்துரை என்பது ஏழை, எளிய மக்களின் படிப்பில் கைவைப்பதாக உள்ளது. அவர் பலமுறை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறிவிட்டு இப்போது நிதியை குறைக்க கருத்து தெரிவிப்பதை ஏற்கமுடியாது. அவர் திட்டமிட்டு அரசுக்கு சங்கடம் ஏற்படுத்த கருத்து தெரிவிப்பதாக உள்ளது. இதை அவர் தவிர்க்கவேண்டும். இதுபோன்ற கருத்துகளை வெளியிடாமல் இருப்பது நல்லது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பெரும்பாலும் சிறுபான்மை சமுதாயத்தினரால் நடத்தப்படுகிறது.
அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிட அவருக்கு அதிகாரம் இல்லை என்று நான் பலமுறை கடிதம் மூலம் அவருக்கு தெரிவித்துள்ளேன். விதிமுறைகளை தொடர்ந்து அவர் மீறி வருகிறார். அன்றாடம் அரசு அலுவலகங்களுக்கு செல்வதும், அங்கு ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டுவதும், தன்னிச்சையாக உத்தரவிடுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் இல்லாத நிலையில் அவரது உத்தரவினை யார் மதிப்பார்கள்?
கவர்னர் தனது கருத்துகளை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பலாம். நேரடியாக உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அவருக்கு சட்டத்தில் இல்லை. அவர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். சம்பளம் கேட்டு அரசு சார்பு நிறுவன தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சம்பளம் வழங்க கோப்பு அனுப்பினால் அதற்கு கேள்வி கேட்டு சிக்கலான நிலையை உருவாக்கி வருகிறார். இந்த அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வேலையை அவர் செய்கிறார். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை நிறுத்த அவருக்கு அதிகாரம் கிடையாது.
கடந்த காலங்களில் இதேபோன்ற நிலையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சம்பளம் வழங்குவதை தடுக்கும் கவர்னரை தொழிலாளர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர். சார்பு நிறுவன பிரச்சினைகள் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயன் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் பரிந்துரை தொடர்பாக 2 மாதத்தில் முடிவெடுக்க உள்ளோம்.
கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால தீர்வுக்கு ரூ.1,342 கோடி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதுவை வந்த மத்தியக்குழு இன்னும் 3 நாட்களில் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். மத்திய அரசு தேவையான நிதி தரும் என்ற நம்பிக்கை உள்ளது. மாகி பிராந்தியத்துக்கு கேரள மாநிலம் அதிரகண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் பெறுகிறோம். இதற்கான கட்டத்தை கேரள அரசு உயர்த்தியது. இதை குறைக்கவேண்டும் என்று நான் கேரள முதல் மந்திரிக்கு கடிதம் அனுப்பினேன். அதன்படி கடந்த 2014 முதல் 2016 மார்ச் மாதம் வரையிலான அதிகப்படியான கட்டணத்தை ரத்து செய்து ரூ.2 கோடி தள்ளுபடி செய்துள்ளார். இதற்கு கேரள முதல் மந்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது தொடர்பாக நிதி ஆயோக் டிசம்பர் மாதம் புதுச்சேரியில் கருத்தரங்கு நடத்த உள்ளது. சேதராப்பட்டிலும் புதிய தொழில் தொடங்க நிறைய இடங்கள் உள்ளது. இதன் மூலம் புதுவையில் புதிய தொழிற்சாலைகள் வரும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story